இலங்கையர்களுக்கு ஜப்பானில் சிறந்த தொழில் வாய்ப்பு
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான திறன் விருத்திக்கான தொழில் வேலைத்திட்டங்கள் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம்
சனத்தொகை குறைதல், வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமை மற்றும் உள்நாட்டு உழைப்புப் படை குறைவடைந்தமை போன்ற காரணங்களால் ஜப்பானின் பொருளாதாரத்தின் பிரதான துறைகளுக்கு தேவையான நிபுணத்துவம் மற்றும் பகுதியளவான நிபுணத்துவங்களுடன் கூடிய மனித வளங்களை வழங்குவதற்காக ஜப்பான் அரசு வெளிநாட்டு தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்வதற்கான பல முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, 2017 ஆம் ஆண்டிலும் மற்றும் 2019 ஆம் ஆண்டிலும் அமைச்சரவை அங்கீகாரத்துடன் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டுள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை தொழிலாளர்கள் ஜப்பானில் தொழிநுட்ப சேவைக்கால பயிற்சி வேலைத்திட்டம் மற்றும் திட்டவட்டமான பயிலுநர் பணியாளர்கள் தொடர்பான வேலைத்திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தொழிலாளர்மைய மற்றும் நிலைபேறான தொழிலாளர் பெயர்ச்சிப் பணிச்சட்டகத்துடன் கூடிய 'திறன் விருத்திக்கான தொழில் வேலைத்திட்டம்' எனும் பெயரிலான புதிய வேலைத்திட்டமொன்று 2027.04.01 அன்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.
அதன்கீழ் தொழிலாளர்களுக்கு உயரிய பாதுகாப்பு வழங்கல், மிகத்தெளிவான தொழில் வழிகாட்டலைத் தயாரித்தல் மற்றும் திட்டவட்டமான பயிலுநர் தொழிலாளர்கள் தொடர்பான வேலைத்திட்டத்திற்கு மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு இலங்கையர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் இரு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


