புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த முறையான அணுகல் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்ற பெண்களின் குடும்பங்களிலுள்ள 2 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பாக கவனத்தைச் செலுத்தினாலும், அவ்வாறான குடும்பங்களில் பேண்தகு அபிவிருத்தி தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பெண்களின் தொழில் ஒப்பந்தக் காலம் முடிவடைந்து நாட்டுக்கு வருகை தந்தாலும், குடும்ப அபிவிருத்திகான தகுந்த திட்டமொன்று இன்மையால், தமது பொருளாதார மற்றும் சமூக ரீதியான நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
3 18 வரையான வயதில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மிகவும் முறைசார்ந்த வகையிலும் சரியான பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரியவந்துள்ளது.
அதனால், புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் நீண்டகால முன்னேற்றத்திற்கு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு பொருளாதார வழிகாட்டல், சிறுவர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, மகளிர் நடவடிக்கைகள், தொழிற்பயிற்சி, சிறு தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக ஏற்புடைய அரச உத்தியோகத்தர்கள் ஒரே குழுவாக செயலாற்றி, குறித்த குடும்பங்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் வசதிகளை வழங்குவதற்காக 'புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் அபிவிருத்திக்கான முறையான அணுகல்' எனும் பெயரிலான கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கருத்திட்டத்தின் மூலம் விசேட கவனம் செலுத்த வேண்டிய நிலைமையிலுள்ள புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கான நிலைபேறான வாழ்க்கைத்தரத்தை வழங்குவதற்காக 05 ஆண்டு அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


