நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் தேசிய மொழிப் பிரிவு, அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரசகரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து அரசகரும மொழிக் கொள்கையை செயல்படுத்துவதற்காக ஒரு வாரத்தை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்று (01) அரசகரும மொழிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது,
அதே நேரத்தில் ஜூலை 02 ஆம் திகதி, அரசகரும மொழிகள் பாடசாலை தினமாகவும்,
ஜூலை 03 ஆம் திகதி அரசகரும மொழிகள் பொதுமக்கள் தினமாகவும்,
ஜூலை 04 ஆம் திகதி அரசகரும மொழிகள் இளைஞர்கள் தினமாகவும்,
ஜூலை 07 ஆம் திகதி அரசகரும மொழிகள் நிறைவு நாள் அமர்வாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திலக் நந்தன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அதன்படி, "மொழியை வளர்ப்போம் - இதயங்களை வெல்வோம்" என்பதே இன்றைய அரசகரும மொழிகள் தினத்தின் கருப்பொருளாகும்.
அரசகரும மொழிகள் தினத்தன்றும், வாரம் முழுவதும் தேசிய மொழிப் பிரிவின் நேரடி மேற்பார்வை மற்றும் நிதி உதவியுடன் அனைத்து மாவட்டச் செயலகங்களாலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.


