தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாத்தல், அரசிறை வருமானம் ஈட்டல் போன்ற நோக்கங்களுடன் செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரியில்லாத ஏனைய இறக்குமதி வரியை தொடர்ச்சியாக விதித்தல் மற்றும் குறித்த வரி வகுதிகளை விரிவாக்கம் செய்தல் காலம்பூராகவும் இடம்பெற்றுள்ளது.
அதன் பெறுபேறாக குறிப்பாக இடைப்பட்ட மற்றும் உள்ளீட்டுப் பண்டங்களுக்கு அதிக இறக்குமதி செலவின் அடிப்படையில் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. அந்நிலைமை சர்வதேச சந்தைகளில் இலங்கையின் உற்பத்திகளில் போட்டித்தன்மை குறைவடைவதற்கும், ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார விருத்தி மட்டுப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
அதனால், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை அதிகரித்தல், கைத்தொழில் மேம்பாடு மற்றும் பெறுமதி சேர்ப்பதற்காக ஒத்துழைத்தல், வர்த்தகத்தை இலகுபடுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வசதிகளை வழங்கல், அனைத்து தரப்பினர்களுக்கும் சமமான போட்டித்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு இணங்கியொழுகுதல் போன்ற நோக்கங்களாகக் கொண்டு, குறித்த செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள 2,634 இயைபுமுறைக் குறியீட்டு இலக்கத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்ட வரை 04 வருடங்களுக்கு கட்டம் கட்டமாக நீக்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


