கொழும்பு நகர்ப்புற புகையிரத வீதிப் புனரமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் மாளிகாவத்த லொக்கோ சந்தியிலிருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான புகையிரதப் பாதை ஒதுக்கிடங்களில் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களுக்கான வீடுகளை வழங்கி அல்லது நட்டஈடு வழங்கி மீள்குடியமர்த்துவதற்காக 2024.08.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான வீடமைப்புத் தொகுதிகளில் கொள்வனவு செய்யப்பட்ட 694 வீட்டு அலகுகளில் தற்போது குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 144 வீட்டு அலகுகள் நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து கிடைக்க இருக்கின்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத் திட்டங்கள் இல்லாத மஹரகம, ஹோமாகம மற்றும் பாதுக்க போன்ற பிரதேங்களில் சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியமர்த்துவதற்காக கொட்டாவ மாலபல்ல பகுதியில் புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் 120 வீட்டு அலகுகளுடன் கூடிய வீடமைப்புத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதுடன், அவற்றின் நிர்மாணப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்து வருகின்றது.
அதன்படி குறித்த வீடமைப்புத் தொகுதியில் குடியமர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு உறுதிகளை வழங்கக் கூடிய வகையில், இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கொட்டாவ மாலபல்ல பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் அதில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியை அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய விடுவிப்புப் பத்திரமாக தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கும், தெரிவு செய்யப்படுகின்ற பயனாளிகளுக்கு பணச்செலவின்றி வீட்டு உறுதிகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.