கல்வியும் பயிற்சியும்

  • :

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் இருந்து 7...

கல்வியும் பயிற்சியும்

 தமது பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்கு புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான செலவைக் குறைத்து அவர்களின் கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் நாம் தொடர்ந்து வழங்குவோம். இந்நோக்கத்திற்காக அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபா 9,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



 கல்வி, அனைத்து பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதனால் அனைவரையும் உள்ளடக்கும் கல்வியினூடாக மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கல்வியில் மாற்றுத்திறன்கூடிய பிள்ளைகளின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது. மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000 கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

 கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 43,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையானது பல பிரச்சனைகளைத் தோற்றிவித்துள்ளது. எனவே, மாணவர்களுக்கான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது கற்றல் பிரதேசங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த வருடங்களில் புதிய மருத்துவ பீடங்கள் தாபிக்கப்பட்டுள்ள போதிலும் தரமான மருத்துவக் கல்விக்காக பேராசிரியர் பிரிவுகளும் ஆய்வுகூட வசதிகளும் கிடைக்கப்பெறாமையினால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கு சப்பிரகமுவ, மொரட்டுவ, உருகுணை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்காக ரூபா 11,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூபா 11,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல மற்றும் மாணவ உதவுதொகைக் கொடுப்பனவுகள் எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்வடைகின்ற வாழ்க்கைச் செலவுடன் ஈடுகொடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மகாபொல மற்றும் மாணவ உதவுதொகை கொடுப்பனவுகளை 2026 இலும் ரூபா 2,500 மூலம் அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றோம். அதற்கமைய, மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10,000 ஆகவும் மாணவர் உதவுதொகை கொடுப்பனவு ரூபா 9,000 ஆகவும் அதிகரிக்கப்படும். அதேபோன்று “நிபுணதா சிசுதிரிய கொடுப்பனவு” ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்படும்.

 மாற்றுத் திறனுடன் கூடிய பிள்ளைகளில் மிகவும் குறைந்த சதவீதத்தினரே உயர்கல்வியை தொடர்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான மிக குறைந்த விசேட வசதிகளுடைய கல்வி நிறுவனங்களிலேயே அவர்கள் கற்கின்றனர். மாற்றுத்திறனுடன் கூடிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் கற்பதை ஊக்குவிக்கும் நோக்குடன் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூபா 5,000 மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு, ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

 தேசிய கல்விக் கல்லூரி புலமைப்பரிசில் பெறுநர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை ரூபா 2,500 இனால் அதிகரிப்பதற்கு முன்மொழிவதுடன் தற்போது ஒதுக்கீடுசெய்யப்பட்ட தொகைக்கு மேலதிகமாக இவ்வதிகரித்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு ரூபா 2,750 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

 தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் விசேடமாக தென்கிழக்கு, யாழ்ப்பாணம் (கிளிநொச்சி), வவுனியா, கிழக்கு, சப்பிரகமுவ பல்கலைக்கழகங்களின் சப்பிரகமுவ பல்கலைக்கழகங்களில் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். நாட்டில் நிதி நெருகடி காரணமாக முறையாகப் பராமரிக்கப்படாத விடுதிகளைப் புனரமைப்பதற்கு இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் பெற்றுக்கொடுக்கும் போது பல்கலைக்கழகங்களின் சுற்றுவட்டாரங்களில் காணப்படும் சமூகத்தின் கட்டிட வசதிகளை பயன்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

 முன்னெடுக்கப்படுகின்ற கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் வாழ்க்கைத் தொழிற்கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்கும் நேர்த்தியான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு, வாழ்க்கைதொழில் பயிற்சி நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துதல் விடயக் கற்கைநெறிகளை நவீனமயப்படுத்தல். ஆசிரியர்கள் மற்றும் போதனாசிரியர்களை பயிற்றுவித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்நோக்கத்திற்காக 09 தொழிற்பயிற்சிக் கல்வி நிலையங்களை சிறப்பு மையங்களாக (Center of Excellence) தரமுயர்த்துவதற்கும் நாடு பூராகவும் 50 பயிற்சி நிலையங்களை தரமுயர்த்துவதற்கும் அவசியமான பணிகள் 2026 இல் தொடங்கப்படும். ரூபா 2,000 மில்லியன் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தொழிற்பயிற்சி கல்வியின் மேம்படுத்தலுக்காக வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 8,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles