ரூ.100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 2.07 கிலோகிராம் குஷ் கஞ்சாவுடன் இலங்கையர் ஒருவர் இன்று (03) கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக வந்த 28 வயதுடைய இலங்கையர் , 2079 கிராம் (2.07 கிலோகிராம்) குஷ் கஞ்சாவை நாட்டிற்கு கடத்த முயன்றபோதே இலங்கை சுங்க போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் Indigo Airlines 6E1171 விமானத்தில் நாட்டிற்கு வருகை தந்திருந்ததுடன், அவரை பரிசோதனை செய்யும்போது அவரது பயணப் பொதியில் குறித்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டெடுக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 மில்லியனுக்கும் அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) அதிகாரிகள் இது தொடர்பாக ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டனர், பின்னர் சந்தேக நபரும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டன.
இலங்கையின் முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக நாட்டிற்குள் ஆபத்தான போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


