கடுவெல-அம்பத்தலே களனி ஆற்று அணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

  • :
களனி ஆற்றின் உயர் நீர் கொள்ளளவினால் ஏற்படும் நீர் கசிவைக் குறைப்பதற்காக, ஒரு நீடித்த புனரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். 
நீண்டகால நீர் கசிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் கடுவெல-அம்பத்தலே நீர் அணைக்கட்டின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் (26) ஆரம்பிக்கப்பட்டதாக , இந்நிகழ்வில் பங்கேற்றபோது அவர் குறிப்பிட்டார்.
 
 நவீன புனரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், நீர் கசிவுப் பகுதியைப் பாதுகாப்பதற்காக 40 மீட்டர் நீளமுள்ள கொங்கிறீட் கரை ஒன்று கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
 மழை, வெள்ளம் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுப்பதற்காக, நீர் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த ஒரு புதிய வடிகால் அமைப்பு பயன்படுத்தப்படும். 
 
தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் புவியியல் அறிக்கைகளின் அடிப்படையில், நீர் பெருக்கைத் தாங்கும் வகையில் அணையைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான இத்திட்டத்திற்கு இலங்கை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம் (SLLDC) ரூ. 41 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இப்பணி நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடுவெல வெலிவிட்ட மற்றும் வெலிபில்லாவ பகுதிகளில் தற்போதுள்ள இடர்களை முற்றிலுமாக அகற்றி, எதிர்காலப் அனர்த்த சூழல்களைத் தாங்கும் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்த, இப்புனரமைப்புத் திட்டம் திட்டமிட்டுள்ளது.

Related Articles