கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிஹினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (16) கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே கலந்துகொண்டார்.
இதன்போது, 2026ஆம் ஆண்டிற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மிகவும் முறையானதாகவும் திறமையாகவும் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக "கொழும்பு மாவட்ட விளையாட்டு உபகுழு" இன்று நியமிக்கப்பட்டதுடன், இந்த உபகுழுவின் ஊடாக எதிர்கால அபிவிருத்திப் பணிகளை மிகவும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்க அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
அத்துடன், கிராமப்புறப் பாடசாலைகளின் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து கௌரவ பிரதமர் அவர்கள் வழங்கிய விசேட அவதானிப்பிற்கு இணங்க, கிராமிய மட்டத்தில் திறமையுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய "எல் நினோ" (El Niño) காலநிலைத் தாக்கத்திற்கு முகம்கொடுப்பதற்காக உணவுப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் மின்சக்தி சேமிப்பு தொடர்பாக அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.


