மண் சரிவு அபாயக் குறைப்பு தொடர்பான 8ஆவது திட்ட வழிகாட்டல் குழுக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI)செயல்படுத்தி வரும் மண் சரிவு பாதிப்புக்குள்ளாகும் நிலையைத் தணிப்பு நடவடிக்கைகள் மூலம் குறைக்கும் திட்டத்தின் (Reduction of Landslide Vulnerability by Mitigation Measures Project - RLVMMP) 8ஆவது திட்ட வழிகாட்டல் குழுக் (Project Steering Committee - PSC) கூட்டம் இன்று (25 ஜூன்) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
திட்ட வழிகாட்டல் குழுவின் தலைவரான பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முக்கிய அரச பங்குதார நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். RLVMMP திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், தற்போதைய சவால்கள் தொடர்பாகவும், நாட்டின் மண் சரிவு அபாயம் அதிகம் காணப்படும் பகுதிகளில் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பங்கேற்பாளர்கள் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு, மண் சரிவு தணிப்பு நடவடிக்கைகளின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் நீண்டகால பயன் மேம்பாட்டுக்கான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
உள்ளூர் சமூகங்களையும் உட்கட்டமைப்புகளையும் பாதுகாப்பதற்காக முன்கூட்டிய அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் அனர்த்தத் தாங்குதிறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாடு இக்கூட்டத்தின் மூலம் மீள வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


