உலகில் அதிக இலாபம் ஈட்டும் வியாபாரமாக தற்காலத்தில் மோசடியாக மாறியுள்ள மருந்துத் துறையின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றும் அவற்றை சரியாக திருத்துவதற்கு முன்னிற்கும் சகல ஊழியர்களையும் ஊக்குவிப்பதற்கு, அவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் துணை நிற்கும் என்றும் கடத்தல்காரர்கள் அல்லது அந்த குழுவின் இலக்குகளுக்காக அமைச்சு அல்லது அரசாங்க சேவைகள் மேற்கொள்ளப்படாது என்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (NMRA) விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
- இதன் போது தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய ஆனந்த விஜேவிக்ரம உட்பட அதிகாரிகளுடன் அதிகார சபையின் தற்போதைய செயற்பாடுகள், நிர்வாகத்துறை, ஊழியர்களின் சிக்கல்கள், மருந்து விலை ஒழுங்குபடுத்தல், மருந்துகளின் பதிவு, புதிய விண்ணப்பங்கள் கோரல், போன்ற துறைகள் தொடர்பாக அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
தரம், தன்மை, மருந்து தொடர்பான சகல செயற்பாடுகளிலும் பிரச்சனைகள் ஏற்பட்டால் ஒரு அணியாக சகலரும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்புடன் கூடியதாக செயற்படுதல் முக்கியமானது என வலியுறுத்தினார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நாட்டில் காணப்படும் மருந்து உற்பத்திகளின் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறன் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரச் சான்றிதழ் ஊடாக பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பை மேற்கொள்ளுதல் மற்றும் முன்னேற்றுவதற்காக முன்னணி செயல்பாடுகளை மேற்கொள்வதுடன், மருந்துகள், சுகாதாரப் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் அழகுக்கலை பொருட்கள் பாதுகாப்பு, தரம் மற்றும் வினைத்திறனை சான்றுப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தல், கண்காணித்தல் மற்றும் சாட்சி அடிப்படையிலான தீர்மானங்களை வழங்கும் நிறுவனமாகும்.