மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் அழைப்பிற்கு இணங்க, மாவட்டத்தில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்திற்கு புற்தரை மைதானத்தை பராமரித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக சர்வதேச புற்தரை ஆடுகள நிபுணர் பிரட் வப்டிஸ், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் காசிப் பிள்ளை சதீசன் தலைமையில் சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்திற்கு நேற்று (07) அவர் வரவேற்கப்பட்டார்.
அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற பிரட் வப்டிஸ் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் புற்தரை மைதானத்தை பராமரிப்பதற்கு பல கோடி பெறுமதியான இயந்திரத்தை கையாள்வது தொடர்பாக இரண்டு வார காலம் மைதானத்தில் தங்கியிருந்து பயிற்சியளிக்கவுள்ளார்.
எதிர் வரும் காலங்களில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் கோட்டைமுனை விளையாட்டு புற்தரை மைதானத்தில் நடைபெறவிருப்பதனால் ஆடுகளங்களை அதற்காக தயார் செய்வதற்காக இப் பயிற்சிகளை நிபுணர் வழங்கவுள்ளார்.
வட கிழக்கு மாகாணத்தில் புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளதுடன் இப்பிரதேச இளைஞர்களை கிரிக்கட் வீரர்களாக மாற்றுவதற்கும் அவர்களை தேசிய கிரிக்கட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


