இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டணம் திருத்தம் தொடர்பாக கிழக்கு மாகாண பொதுமக்களின் ஆலோசனையினை கேட்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பில் நேற்று (08) நடைபெற்றது. முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடா்பான ஆலோசனைகளைக் கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சாரக் கட்டணம் தொடர்பான ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கேட்டறியும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, பிரதிப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமானகே, பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் செயலாளர் நதிஜா வரப்பிட்டிய மற்றும் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகள் என இதில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டத்தில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுனர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 43 பேர் இதன்போது தங்களது கருத்துக்களை முன்வைத்தமையுடன் இக் கூட்டத்தில் சுமார் 80 நபர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.