முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானம்!
  • :
முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட (மீன்பிடித் துறைப் பீடம் - Faculty of Fisheries ) காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை நிர்ணயித்து வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிருவாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

 முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

 
கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக அக்காணி தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஆராய்ந்து உடனடித் தீர்வு காணும் நோக்கில், ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தாம் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலப்பகுதியிலேயே, இம்மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை முன்னிட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றின் கிளையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம் நிலையான வளர்ச்சியை அடைய வேண்டுமாயின், அங்கு ஒரு பல்கலைக்கழகப் பீடம் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், வவுனியா பல்கலைக்கழகம் மன்னார் மாவட்டத்தில் தமது பீடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா, முல்லைத்தீவில் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியில் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தயாராகவே உள்ளதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையே இதுவரை ஏற்பட்ட தாமதத்திற்கு காரணமாக இருந்ததாகவும் விளக்கினார்.
 
இதற்குத் தீர்வாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்படவுள்ள விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, பல்கலைக்கழகத்தின் ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகளுக்காக ஒரு தொகை நிதியை வழங்குவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் இச்சந்திப்பில் உறுதியளித்தார்.
 
மேலும், பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 44 ஏக்கர் காணிக்குரிய எல்லைகளை உடனடியாக அளவீடு செய்து, வேலி அமைக்கும் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் உபவேந்தர் உறுதியளித்தார். வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக சிபாரிசின் மூலம் வழங்கும் நிதி உதவியுடன் படிப்படியாகக் கட்டட நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் உபவேந்தர், பதிவாளர், வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சார்பிலான பிரதிநிதிகள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Related Articles