அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நேற்று (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற மக்கள் தொடர்பாடல் பிரிவு என்பன இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்கள் தங்கள் கல்வியுடன் தொடர்புடைய ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பாராளுமன்றத்தைப் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் வரலாறு, நிறைவேற்று அதிகாரத்தின் வகிபாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து அந்தப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் திட்டமும் இதனுடன் இணைந்ததாக செயல்படுத்தப்படுகிறது.
மேலும், "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்துடன் இணைந்தாக பாடசாலைகளுக்கு பெறுமதியான தாவரங்களும், நூலகங்களுக்கு மதிப்புமிக்க புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார, அனைத்து குடிமக்களும் ஒன்றிணைவதன் மூலமே ஒரு நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்று தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகம் வேகமாக மாறிக்கொண்டிருந்தாலும், நெறிமுறையான குடிமக்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும் சூரியபண்டார கூறினார்.
பின்தங்கிய கிராமங்கள் அல்லது பின்தங்கிய பாடசாலைகள் என்றொரு சமூகம் கிடையாது என்றும், ஒருவரின் இலக்குகளுக்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதன் மூலம் வெற்றியை அடைய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய ஜனாதிபதி தம்புத்தேகம போன்ற தொலைதூர கிராமத்திலிருந்து ஜனாதிபதி பதவி வரை வருவதற்கு அர்ப்பணிப்பு மற்றும் இலக்குகளை அடைவதற்கான முயற்சியின் விளைவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ஜனாதிபதி ஆலோசகர் (சட்டம்) சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, பணிப்பாளர் (முப்படை ஒருங்கிணைப்பு) ஏயார் கொமடோர் ஆசிரி கால்லகே, உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர் குழாம் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.