மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
  • :

2025 ஜூன் 02ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் மூலம் பணம் அனுப்பும் செயற்பாடுகளில் (ஹவாலா) ஈடுபட்டுள்ளவர்களை இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யுமாறு கோரிக்கை

அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகளில் மூன்று ஒழுங்கு விதிகளுக்கும், கட்டளை ஒன்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (07) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டளைகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி குறித்துக் கவனம் செலுத்திய குழு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் தொடர்பில் காணப்படும் பிரச்சினை தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சந்தைக்கு வெளியிடப்பட முன்னர் உரிய தரத்தில் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நடைமுறை தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழு அதிகாரிகளுக்கு அறிறுவுத்தல் வழங்கியது.

2005 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் குறித்துக் கவனம் செலுத்திய குழு, உண்டியல் மூலம் பணம் அனுப்பும் செயற்பாடுகளில் (ஹவாலா) ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய போதுமான தகவல்கள் இருந்தால் வழங்குமாறும் வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் கோரியதுடன், அதன் ஊடாக குறித்த செயல்முறையை ஒழுங்குபடுத்தும் போது ஏற்படக்கூடிய பின்விளைவுகளைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்தது.

உண்டியல் மூலம் பணம் அனுப்பும் செயற்பாடுகளில் (ஹவாலா) ஈடுபட்டுள்ளவர்களை மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யுமாறு கோரப்பட்டிருப்பதாகவும், புதிதாக இத்துறையில் ஈடுபடவிருக்கும் நபர்கள் செயற்பாடுகளை ஆரம்பிக்க முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பான ஒழுங்கு விதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியபோதும், இதானல் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் நன்மைகள் குறித்த அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்குக் குழு அறிவுறுத்தியது.

2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளையைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட குழு, ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர் சட்டத்தை மேலும் ஆராயுமாறு குழுவின் உறுப்பினர்கள் கோரியபடி, ஒழுங்குமுறையை எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஆராய வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது. உலக வங்கியுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடு மற்றும் சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைய நடைமுறைப்படுத்துவதாக இணங்கிக் கொண்டதற்கு அமைய மேலதிக வரிமுறைகளுக்கு (para-tariffs) முகங்கொடுக்கும் அரசாங்கத்தின் ஐந்துவருட திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது.

மேலும், 2010 ஆம் ஆண்டின் 17 இலக்க ஆம் சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு அனுமதியளித்த குழு, கடந்த இரண்டு வருடங்களில் சீட்டாட்டத் தொழில் ஒழுங்குபடுத்துனரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பவற்றுக்கும் அரசாங்க நிதி பற்றிய குழு அங்கீகாரம் வழங்கியது. பட்டியலிடப்பட்ட எந்தவொரு நிறுவனமும் இலங்கைக்கு வெளியே 500,000 அமெரிக்க டொலர்கள் வரை முதலீடு செய்வதற்கும் பட்டியலிடப்படாத நிறுவனங்களுக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் வரை முதலீடு செய்வதற்கும் இந்த ஒழுங்குவிதி இடமளிக்கின்றது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சதுரங்க அபேசிங்க, கௌரவ (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரவி கருணாநாயக்க, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, கௌரவ அர்கம் இலியாஸ், கௌரவ நிமல் பலிஹேன, கௌரவ விஜேசிறி பஸ்நாயக்க, கௌரவ திலின சமரக்கோன் மற்றும் கௌரவ லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]