'நிதியியல் அறிவு மாதம் 2025' ​செப்டம்பர் 10 தொடக்கம் மத்திய வங்கி ஆரம்பித்து வைக்கின்றது

'நிதியியல் அறிவு மாதம் 2025' ​செப்டம்பர் 10 தொடக்கம் மத்திய வங்கி ஆரம்பித்து வைக்கின்றது
  • :

மத்திய வங்கியானது 2025 செப்டம்பர் மாதம்10 ஆம் திகதி தொடக்கம் நிதியியல் அறிவு மாதத்தை அங்குரார்ப்பணம் செய்து, நிதியியல் வசதிக்குட்படுத்தலை நோக்கி தேசத்தின் முன்னேற்றகரமான பயணத்தில் இன்றியமையாத மைற்கல்லை அடையாளப்படுத்துகின்றது.

இம்முன்னெடுப்பு நிதியியல் அறிவு வழிகாட்டல் கட்டமைப்பின் கீழ் கொண்டுநடாத்தப்பட்டு, 'நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதோர் இலங்கை' இனை உருவாக்கும் மத்திய வங்கியின் பரந்தளவிலான தொலைநோக்குடன் அணிசேர்கின்றது. 

நிதியியல் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், முன்மதிமிக்க தீர்மானம் எடுத்தலை பேணிவளர்ப்பதற்கும் அத்துடன் நிலைபெறத்தக்க பொருளாதாரீதியான நலனோன்புகையை முன்னேற்றுவதற்கும் அவசியமான அறிவு, திறன்கள் மற்றும் எண்ணப்பாங்குகள் என்பவற்றைக் கொண்டு பொதுமக்களுக்கு வசதியளிப்பதற்கான மத்திய வங்கியின் தீர்க்கமான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டி, இம்மாதம் முழுவதும், தாக்கமிக்க தொடரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

நாடு முழுவதும் நிதியியல் அறிவை வலுப்படுத்தும் வகையில் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் பாகமாக, பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளையோர், மகளிர், மற்றும் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சியாளர்கள் உள்ளடங்கலாக பல்வேறு குழுக்களை இலக்காகக்கொண்டு நாடு தழுவிய முன்னெடுப்புக்களை மத்திய வங்கி நடைமுறைப்படுத்துகின்றது. சமூகத்தின் அனைத்து வகுப்பினர்களுக்கும் அனைத்தையும் உள்ளடக்கியதும் அணுகக்கூடியதுமான நிதியியல் அறிவை இம்முன்னெடுப்புகள் உறுதிப்படுத்துகின்றன. 

பரந்தளவில் பொதுமக்களை சென்றடையும் வகையில் அறிவுசார் காணொளிகளை ஒளிபரப்புவதுடன் இணைந்து, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் யூடியூப் அலைவரிசை போன்ற பிரதான ஊடக வழிகளினூடாக பரப்பப்படும் நுண்ணோக்குமிக்க நிதியியல் அறிவு கலந்துரையாடல்கள் இம்முன்னெடுப்பின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. ஆறு பிரதேச மட்டங்களிலும்; 'நிதியியல் அறிவுத் தினம்' நிகழ்ச்சித்திட்டங்களும்; அத்துடன் 'பொருளாதார மற்றும் நிதியியல் அறிவு மன்றம்' நிகழ்வொன்றும் நடாத்தப்பட்டு, உள்ளூர் மட்டத்தில் மக்களுடனான இடைத்தொடர்பை வசதிப்படுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக, தகவலறிந்த மற்றும் உறுதியான நிதியியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இளையோர், மகளிர் அத்துடன் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சியாளர்கள் போன்றோரை வலுப்படுத்துவதில் விசேட கவனம்செலுத்தி விழிப்புணர்வு அமர்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.  

மேலும், இலங்கை வங்கியாளர் நிறுவகத்துடன் கூட்டிணைந்து, தகைமைபெற்ற பயிற்றுநர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, 'நிதியியல் அறிவில் சான்றுபடுத்தப்பட்ட பயிற்றுநர்' ஆளணியையும் மத்திய வங்கி அறிமுகப்படுத்துகின்றது. இதற்கு நிறைவளிக்கும் முகமாக, தமிழ்மொழி மூலம் பயிற்றுநர்களைப் பயிற்றுவித்தல் முயற்சிகள் தமிழ்பேசும் மக்களுக்கான பெறுவழியை விரிவுபடுத்துகின்றன. அடிமட்டத்திலுள்ள மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்துவதற்கு, முக்கியமான நிதியியல் அறிவுசார்ந்த தகவல்களைக் கொண்ட பக்கக் குறிப்புகள் குறிப்பேடுகள், பெயர் அடையாள ஒட்டுப்பட்டிகள், புத்தகப்பக்க அடையாளச்சீட்டு போன்றவற்றை மத்திய வங்கி வழங்குகின்றது. இம்முயற்சிகளை நிறைவளிக்கும் வகையில், பொதுமக்களிடையே சேமிப்பு, முதலீடு மற்றும் பொறுப்புமிக்க நிதியியல் நடத்தை போன்ற நிதியியல்சார்ந்த சிறந்த கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கு களனி பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கமைப்படும் 'முதலீட்டு வாரம்' நிகழ்வையும் மத்திய வங்கி வசதியளிக்கின்றது. 

இந்நிதியியல் அறிவுசார்ந்த இம்முன்முயற்சிகளில் முனைப்புடன் ஈடுபடுவதற்கும் நிதியியல்சார் அறிவுமிக்கதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பதற்கும் மத்திய வங்கி பொதுமக்களை ஊக்குவிக்கின்றது.

Related Articles