இலங்கைக்கான பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே அவர்கள் பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு பிரியாவிடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை
அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இணைந்துகொண்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும், சட்டவாக்கங்களுக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளையும் வலுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பிரதி உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தரர். இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் ஈடுபாடுகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற அதிகரிரகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
கலாநிதி பாண்டே அவர்கள், இலங்கையில் வழங்கிய அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டிய கௌரவ சபாநாயகர், கடுமையான நேரங்களில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக தித்வா சூறாவளித் தாக்கத்தின் பின்னரான சூழல் மற்றும் மத்திய கிழக்கில் தற்பொழுது காணப்படும் நிலைமையால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிப்பதற்கு இந்தியா வழங்கும் உதவிகளையும் அவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கும் சபாநாயகர் நன்றி பாராட்டினார்.
அத்துடன், கலாநிதி பாண்டே அவர்கள், கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இலங்கையில் பதவி வகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்குப் பிரதி சபாநாயகர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கலாநிதி பாண்டே அவர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதி சபாநாயகர், இரு நாடுகளுக்குமிடையிலான சட்டவாக்கங்களின் ஒத்துழைப்பை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் நன்றியைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கலாநிதி பாண்டே அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு கௌரவ சபாநாயகர் மற்றும் கௌரவ பிரதி சபாநாயகர் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


