பிரதமரின் தலைமையில் ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் 'சரசவி திரியோ அபிமன்' ஆரம்ப நிகழ்வு

பிரதமரின் தலைமையில் ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் 'சரசவி திரியோ அபிமன்' ஆரம்ப நிகழ்வு
  • :

சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே எமது அரச கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன
- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து செயற்பாடுகளையும் மத்தியமயப்படுத்துவதற்குப் பதிலாக, அவற்றை பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது

- சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன

ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளை வழங்குவது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் 59% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது

- ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க

உடல்ரீதியான குறைபாடுகள் தமது கல்விக் கனவுகளுக்குத் தடையாக மாறுவதற்கு இடமளிக்காது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" எனும் விசேட மாணவர் உதவித்தொகை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (11) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ், தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் பாராட்டப்படவுள்ளதுடன், ஒரு மாணவருக்கு ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா உதவித்தொகையை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“சரசவி திரியோ அபிமன்" ஆரம்ப நிகழ்வில் 236 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டப்படவுள்ளதுடன், இத்திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ள ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆகும். கொழும்புக்கு வருகை தரும் போது எதிர்நோக்க வேண்டியுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் மாணவர் உதவித்தொகை வழங்கும் போது, உதவித்தொகை பெறும் மாணவர்களின் அருகிலேயே சென்று அதனை வழங்கியமை சிறப்பம்சமாகும்.

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் "சரசவி திரியோ அபிமன்" திட்டமானது, மாற்றுத்திறனாளி மாணவர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கல்விச் சாதனைகளுக்கு தேசிய அங்கீகாரத்தை வழங்குவதோடு, எந்தவொரு உடல்ரீதியான தடைகளும் கல்விக்கனவுகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் சிறந்த சமூக வலுவூட்டல் திட்டமாகும்.

சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் அரச கொள்கைகளை வகுத்து வருகின்றது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

இன்றைய நாள் நமது நாட்டின் வரலாற்றில், குறிப்பாக ஜனாதிபதி நிதியத்தின் வரலாற்றில் மிகவும் விசேடமான ஒரு நாளாகும். கடந்த ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் எடுக்கப்பட்ட மற்றுமொரு விசேடமான நடவடிக்கை இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்கள்நேய ஜனாதிபதி நிதியத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் மற்றுமொரு வெற்றிகரமான அடி வைக்கப்பட்ட ஒரு நாள் என்றுதான் இதைக் கூற வேண்டும். நமது நாட்டில் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவது எளிதானது அல்ல. அது அனைவருக்கும் கிடைப்பதும் இல்லை. இலட்சக்கணக்கான பிள்ளைகள் உயர்தரத்தில் சித்தியடைந்தாலும், அதனுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைகின்றனர். இன்று இங்கு இருப்பது பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுகின்ற மிகவும் தைரியமான மற்றும் உறுதியான எண்ணங்கொண்ட பிரஜைகளின் ஒரு குழுவினராகும். நீங்கள் பல சவால்களை வென்று, நாளாந்தம் அந்த சவால்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டே இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு அங்கீகாரத்தை வழங்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் உண்மையிலேயே சமூகத்திற்கும், முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாவீர்கள். உங்களது தைரியத்தை நாங்கள் மதிக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் ஒரு அங்கமாகும். சமூகத்தில் அனைவருக்கும் உள்ள உரிமைகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் உரியவை என்ற அடிப்படையில் எமது அரசாங்கம் கொள்கைகளை வகுத்து வருகின்றது. அனைத்து பரந்த எல்லைகளையும் நோக்கி, இந்த பன்முகத்தன்மைகளை எமது கல்வி முறைமைக்குள் ஏற்றுக்கொள்கிறோம் என்ற செய்தியை நாம் வழங்க வேண்டும். அந்த பன்முகத்தன்மைகளின் ஊடாக கற்றுக்கொண்டு மிக உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளி பிள்ளைகளை பல்கலைக்கழக முறைமைக்குள் அனுமதிப்பது பெரும் போராட்டத்திற்கு பின்னரே சாத்தியமானது. தற்போது மாணவர்கள் எந்தவொரு பாடத்தையும் படிப்பதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த உரிமையைப் பெற்றுக்கொள்ள வரும் மாணவ, மாணவிகள் எவ்வித தடையுமின்றி தமது கல்விப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பிரிவுகள் இருக்க வேண்டும். கல்வி டிஜிட்டல் மயமாக்கல் பணிக்குழு இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக முன்னோடித் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பன்முகத்தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான பொறுப்பு உள்ளது. இது கைவிட முடியாத ஒரு பொறுப்பாகும்.

சமூகத்தின் ஒரு பகுதியை புறக்கணித்துவிட்டு முன்னேறிய சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது. நாட்டின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும், சிறப்புத் தேவையுடைய 236 மாணவ, மாணவிகள் முதற்கட்டத்தின் கீழ் இன்று பாராட்டப்படுகிறார்கள். உங்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 23.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்கி மேற்கொள்ளப்படும் இந்த உன்னதமான பணியை, அரசாங்கத்தின் சார்பில் நான் பாராட்டுகிறேன். உங்களுடன் சேர்ந்து உங்களது பெற்றோர்களுக்கும் எனது கௌரவத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் உங்களுக்காக ஒரு பாரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக நீங்கள் இரவும் பகலும் அயராது உழைத்ததை நாங்கள் அறிவோம்.

நீங்கள் பெறும் உயர்கல்வியை நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யக்கூடிய வகையில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அதற்கு அவசியமான தொழில்முறை வழிகாட்டல்களை வழங்குவதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் அதிகபட்சமாகச் செயல்படுவோம். நீங்கள் நாட்டிற்கு ஒரு சுமையல்ல. நீங்கள் இந்நாட்டிற்கு ஒரு பெறுமதிமிக்க மனித வளம் ஆகும். நீங்கள் இந்த சமூகத்தின் பங்குதாரர்கள். உங்களுக்குள் இருக்கும் கனவுகள் நனவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன,

2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியத்திற்கு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மாற்றுத்திறனாளிகளாய் இருந்து உயர்கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இவ்வாறான ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது, ஜனாதிபதி நிதியத்திற்கு அரை நூற்றாண்டு நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையிலாகும். இந்த உதவியை உங்களுக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற போது, உண்மையாகவே அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதிகள் கிடைக்கப்பெறும் முக்கிய வழிகளில் ஒன்று, அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டு விற்பனை வருமானத்தில் ஒரு பகுதி அதில் வைப்பிலிடப்படுவதாகும். இவ்வாறு உங்களுக்கு வழங்கப்படும் பணத்திற்கு நாட்டின் அனைத்து மக்களும் பங்களிப்பு செய்கிறார்கள். ஜனாதிபதி நிதியம் உண்மையாகவே மக்களின் நிதியமாக மாறியிருப்பது 48 ஆண்டுகளுக்குப் பின்னராகும். தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தின் அனைத்துப் பணிகளையும் மத்தியமயப்படுத்துவதற்குப் பதிலாக, பரவலாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அளவிற்கு ஒரு திறமையான சேவை இன்று ஜனாதிபதி நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் என்று எம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது. இன்று ஜனாதிபதி நிதியம் மக்களின் காலடிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நோயாளிகள், மாணவர்கள் என பல்வேறு தேவைகளைக் கொண்ட மற்றும் இனம் காணப்பட்ட குடும்பங்களுக்காக உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டிற்கு மாத்திரம் கல்விக்காக 4.46 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வியில் ஒரு புதிய புரட்சியும், மாற்றமும் உருவாகி வருகின்றது. சமூகப் பலன்கள், கல்விப் பலன்கள் அனைத்தையும் அனைவருக்கும் சமமாக வழங்குவதற்கு இணையாக, எக்காரணம் கொண்டும் உங்களை நாங்கள் கைவிட மாட்டோம். இன்று மக்களின் மனதிற்கு நெருக்கமானதொரு நிதியமாக ஜனாதிபதி நிதியம் மாறியுள்ளது. ஜனாதிபதி நிதியம் என்பது உண்மையாகவே மக்களின் நிதியமாகும். இதற்கு முன்னர் இருந்த சந்தேகத்தை இப்போது வைத்துக்கொள்ள வேண்டாம். இன்று ஜனாதிபதி நிதியமானது மக்களின் நலன்புரிச் சேவைகளையும், எதிர்காலத்தையும் உருவாக்கும் ஒரு நிதியமாக மாற்றப்பட்டுள்ளது என்பதைக்கூற வேண்டும்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே,

ஜனாதிபதி நிதியம் மாற்றுத்திறனாளிகளுக்காக எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் மிகவும் உயர்வாகப் பாராட்டுகிறோம். நமது நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், சமூகத்தில் நிலவும் மனப்பாங்குகளை மாற்றுவது என்பது நீண்ட கால செயல்முறையாகும். இந்தச் செயல்முறைக்காக நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய கௌரவமான இடத்தை வென்றெடுத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

உங்களுக்கு கௌரவமான சமூக வாழ்வை உரித்தாக்கிக் கொடுப்பதே எமது ஒரே நோக்கம். சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் ஒன்றை தயாரித்து, அதனை மிகக் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஆயிரக்கணக்கான செவிப்புலன் குறைபாடுடையோருக்காக, சைகை மொழிக்கென தனியானதொரு சட்டமூலத்தைத் தயாரித்து, தற்போது அதனை நிறைவு செய்து சட்டமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நமது நாட்டின் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளைப் போன்றே, சைகை மொழியையும் சட்டப்பூர்வமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா,

இன்றைய நாள் ஒரு விசேடமான நாள். மாற்றுத்திறனாளியாக இருக்கும்போது, இரண்டு பக்கங்களிலிருந்து பாரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. ஒருபுறம் தனது குறைபாட்டிற்கு எதிராகவும், மறுபுறம் ஒருவரை மாற்றுத்திறனாளியாக்குகின்ற சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பௌதிகக் காரணிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபடுவது கடினமானது, சவாலானது. அந்த சவாலை வெல்ல வேண்டுமானால், ஒருவருக்குள் தளராத தைரியமும், உறுதியும் இருக்க வேண்டும். அத்தகைய தைரியத்தைக் கொண்ட ஒரு குழுவினர்தான் நீங்கள். ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் இந்தப் பரிசு, உங்களின் குறைபாட்டிற்காக வழங்கப்பட்டதொன்றல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்கும் 'வாழ்க்கையை எவ்வாறு வெல்வது' என்பது குறித்த ஊக்கத்தை நீங்கள் வழங்கியிருக்கிறீர்கள். இந்த மாணவர்கள் தங்களுடைய ஊக்கத்தையும், மனஉறுதியின் சக்தியையும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இது ஒரு சமூக முதலீடாகும். கலங்கரை விளக்கங்கள் வழங்கும் வெளிச்சத்திற்காகச் செய்யப்பட்ட ஒரு முதலீட்டையே ஜனாதிபதி நிதியம் இன்று செய்திருக்கிறது.

ஜனாதிபதி நிதியம் மிக விரைவாக மக்கள் மயப்படுத்தப்பட்டு, மக்களின் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும், பல்வேறு பிரிவினரையும் சென்றடைவதற்கு ஜனாதிபதி நிதியம் செயற்பட்டுள்ளது. நாட்டிற்கே ஊக்கமளிக்கும் மாற்றுத்திறனாளிகளை அது அரவணைத்ததற்குக் காரணமும் இதுதான். இதில் உள்ள ஒவ்வொரு ரூபாவிலும் ஒட்டுமொத்த மக்களின் உழைப்பும் அடங்கியுள்ளது. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் இந்த நன்மையின் ஊடாக, நீங்கள் இன்னும் அதிக மனஉறுதிமிக்கவர்களாக மாற வேண்டும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,

நாம் ஜனாதிபதி நிதியத்தைப் பொறுப்பேற்கும்போது, அதன் பயன்பாடு குறித்து மகிழ்ச்சியடையக்கூடிய நிலைமை இருக்கவில்லை. இதன் இலாபங்களையும் பலன்களையும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஒரு சிலரே பெற்றுக்கொண்டனர். அங்கு வெளிப்படைத்தன்மை இருக்கவில்லை. ஜனாதிபதி நிதியத்தை வெளிப்படைத்தன்மையுடன் கையாள வேண்டும் என்பதே எமது தேவையாக இருந்தது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதி நிதியத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதன் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டன. நிதியத்தின் சேவைகள் தற்போது கிராமங்களுக்குச் சென்றடைந்துள்ளன. கொழும்புக்கே வர வேண்டிய தேவை இனி இல்லை. உங்களுடைய தேவைகளை இன்று பிரதேச செயலகங்கள் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டில் பயனாளிகளுக்கு நன்மைகளை வழங்குவதை 59% இனால் அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது.

ஜனாதிபதி நிதியம் இன்று மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவிகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் இன்று கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு அதிகளவிலான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

மகாபொல புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியம் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மேலும்,  நாம் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடத்துறையிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. ஜனாதிபதி நிதியத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் லொத்தர் விற்பனையாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறான பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கப்படுகின்றன. அதற்கு இணையாக, மாற்றுத்திறனாளிப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஒரு இலட்சம் ரூபா வழங்கும் வேலைத்திட்டமே இன்று இங்கு நடைபெறுகிறது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களான சரத் சந்திரசிறி மாயாதுன்னே, பேராசிரியர் ஜே. ஆர். பி. ஜயகொடி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன ஆகியோருடன், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபையின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளி சமூகம் தொடர்பான கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles