1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அமைக்கப்பட்டுள்ள "பிராந்திய கைத்தொழில் சேவைக் குழு" மூலம் மற்றும் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள "அமைச்சுக் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு" மூலம் கைத்தொழில் பேட்டைகளுக்காக முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.
அதன்படி, பிராந்திய கைத்தொழில் சேவைகள் குழுவால் விதந்துரைக்கப்பட்ட 38 முதலீட்டு திட்டங்களுக்கு காணிகளை ஒதுக்குவதற்காக அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு விதந்துரைத்துள்ளது.
இதற்கான, மொத்தத் தொகையாக 2,548.22 மில்லியன் ரூபாய் முதலீடப்படவுள்ளது. அத்துடன், குறித்த தொழிற்றுறைத் திட்டங்களினால் 1,559 நேரடி வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த முதலீட்டாளர்களுக்கு உயர்ந்தபட்சமாக 35 வருடங்கள் குத்தகை அடிப்படையில் குறித்த கைத்தொழில் பேட்டைகளில் காணித்துண்டுகளை வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


