புதிய கல்வி மறுசீரமைப்பில் அழகியல் பாடங்களை  எவ்விதத்திலும் நீக்குவதில்லை - பிரதமர் 

புதிய கல்வி மறுசீரமைப்பில் அழகியல் பாடங்களை  எவ்விதத்திலும் நீக்குவதில்லை - பிரதமர் 
  • :
புதிய கல்வி மறுசீரமைப்பில் எதற்காகவும் அழகியல் பாடங்கள் மற்றும் சுகாதாரமும் உடற் கல்வியும் ஆகிய பாடங்களை நீக்குவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
 
2026 இலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்துதல் மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வது குறித்த கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை குழு பிரதிநிதிகள் சிலருடன் இன்று (08) அலரி மாளிகையில் இடம்பற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த பிரதமர் இதனை குறிப்பிட்டார். 
 
கல்வி முறைமையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ளும் விதம் மற்றும் தற்போது அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
 
பாடங்களில் திருத்தம் மற்றும் விடயங்களை உள்வாங்குதல், கல்வி மற்றும் பாடசாலைகளில் இடம்பெற வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சி மற்றும் மனப்பாங்கு விருத்தி, கல்வித் துறையில் இடம்பெற வேண்டிய தொழில் கல்வி அபிவிருத்தி, மதிப்பீட்டு முறை சீர்திருத்தம், கல்விக் கொள்கை தயாரித்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டது.
 
 
கல்வி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும் போது முன் பிள்ளை பருவ விருத்தி ஆரம்பக் கல்வி, இடை நிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய பிரிவுகளில் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், முன் பிள்ளைப் பருவம் தரம் 1 முதல் தரம் 6 வரையும், தரம் 6 இலிருந்து தரம் 9 வரையும், தரம் 10 இலிருந்து தரம் 13 வரையும் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.
 
"கல்வியை மாற்றுவோம் இலங்கையை மாற்றுவோம் (Transform Education, Transform Sri Lanka)" என்பதைக் கருப்பொருளாக எடுத்து மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது சகலரினதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
 
 
இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளீன் ஹேவகே, புத்த சாசன சமய அலுவல்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ, கல்வி அமைச்சு,  தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் எனப்  பலர் கலந்து கொண்டனர்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]