கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் கடந்த (13) நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் www.rebuildingsrilanka.gov.lk உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
MIT மற்றும் டயலாக் (Dialog) நிறுவனங்களின் முன்மொழிவுக்கு அமைய, அந்த நிறுவனங்களினால் அரசாங்கத்திற்காக www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது.
நாடு எதிர்கொண்ட அனர்த்தத்தின் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகத்தை ஒரே மேடைக்குக் கொண்டு வந்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பகமான செயல்முறையை உருவாக்குவதே இந்த இணையத்தளத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த இணையத்தளத்தின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு நிதி ரீதியாகவும் அத்துடன் பொருட்கள், காணி மற்றும் ஏனைய வளங்களை நன்கொடையாக வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, நன்கொடையாளர்கள் தமது நன்கொடைகள் தொடர்பான தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் அவதானிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
மேலும், மாவட்ட ரீதியாக ஏற்பட்ட சேதங்கள், தமது நிதியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஆகியவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது இதன் முக்கிய அம்சமாகும்.
இந்த இணையத்தளமானது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நன்கொடை முகாமைத்துவம், சமூக நீதி, நிலையான அபிவிருத்தி மற்றும் பொறுப்புக்கூறலுடனான ஆட்சி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கமைய, www.rebuildingsrilanka.gov.lk இணையத்தளம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும்.


