கொழும்பு, இலங்கை – தாங்குதிறன் விளையாட்டுக்களில் (Endurance Sports) வாழ்நாள் முழுவதும் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், இலங்கையின் விளையாட்டுத்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் IRONMAN 70.3 கொழும்பு சர்வதேச விளையாட்டு நிகழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை நேற்று விளையாட்டு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ். அச்சுதன், தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பிரியந்த ஏக்கநாயக்க, Serendib Multisport (Pvt) Ltd பணிப்பாளரும் IRONMAN 70.3 கொழும்பு போட்டிப் பணிப்பாளருமான ராஜன் தனநாயகம் மற்றும் அதன் சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓட்டப்பந்தயப் பணிப்பாளர் யசாஸ் ஹேவகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் சர்வதேச அனுபவம் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட IRONMAN 70.3 கொழும்பு, ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2026 இல் மீண்டும் இலங்கைக்கு வருகிறது. இம்முறை 45 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 1,000 போட்டியாளர்களும் ஆதரவாளர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஏராளமான இலங்கை வீர வீராங்கனைகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் இலங்கை எதிர்கொள்ளும் நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற தொற்றாத நோய்களுக்கு தீர்வாக நீச்சல், சைக்கிள் ஓட்டம் மற்றும் ஓடுதல் போன்ற தாங்குதிறன் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த ஒத்துழைப்பின் மூலம் விளையாட்டு மருத்துவம் மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்கள் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர் படையினருக்கு (Youth Corps) தன்னார்வத் தொண்டு வாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே, "IRONMAN மூலம் விளையாட்டு என்பது வயது வேறுபாடின்றி வாழ்நாள் முழுவதும் ஈடுபடக்கூடிய ஒன்று என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன், இது இலங்கை மீதான சர்வதேச நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அமையும்" எனத் தெரிவித்தார்.


