தரமான உயர் தரத்திலான மருந்துகளை நாட்டின் அரச துறைக்கு வழங்குவதுடன் அம்மருந்துகளை நியாயமான விலையில் சந்தைக்கு வழங்குதல் மற்றும் மிகவும் பொறுப்புடன் மேற்கொள்வதற்காக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அண்மையில் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் தேசிய மருந்து தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மேன்முறையீட்டு குழு ஆகியவற்றிற்கு அங்கத்தவர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்; உயர்தரத்திலான தரமான மருந்துகளை நாட்டின் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பிற்கு தொடர்ந்து வழங்குதல் மற்றும் நியாயமான விலையில் அம்மருந்துகளை திறந்த சந்தைக்கு வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் முதன்மை பொறுப்பு தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கீழ் செயற்படும் தேசிய மருந்து தொடர்பான குழு மற்றும் தேசிய மேன்முறையீட்டு குழு என்பவற்றுக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு