டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி - ஜனாதிபதி

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் என்பது உறுதி - ஜனாதிபதி
  • :

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07)  ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay) ,ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும். 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு  முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

"Govpay" மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான கொடுப்பனவுகளை செய்ய முடியும் என்பதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 30 அரச நிறுவனங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.

இங்கு  கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தொழிநுட்பம் மற்றும் அறிவியலினால் ஏற்படும் முன்னேற்றங்கள்  மக்களின் வாழ்வை இலகுவாக்குவதாகவும், இதன் மூலம் வினைத்திறனான, தரமான மற்றும் விரயம் குறைந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தொழிநுட்பத்தின் வெற்றிகளின் காரணமாகவே உலக வரலாற்றில் படிப்படியாக   முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, மனித நாகரிகத்தை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு நிலைக்கு உயர்த்த விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள் என்பன செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுவதாகவும், அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க

வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முதல் பிரதேச செயலக மட்டத்தில் குறித்த முறைமையை செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீண்ட காலத்துக்கு முன்னரே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையினால் மக்களின் வாழ்க்கையும்  நாட்டின் பொருளாதாரமும் பின்னடைந்து காணப்படுவதோடு, இன்றைய தினம் டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டை தற்போதைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு உயர்த்தும் ஒரே வழி டிஜிட்டல் மயமாக்கல் எனவும், அதனால் மக்களின் தேவைகளை எந்தவிதமான அழுத்தம் மற்றும் அலைச்சல் இன்றி நிறைவேற்ற முடியும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இயந்திரமயமான வாழ்க்கை முறையினால் எமது நாட்டு மக்கள் பண்பாட்டு ரீதியான வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பண்பாட்டு வாழ்வை உருவாக்கிகொள்ள டிஜிட்டல் மயமாக்கல் வசதியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த மாற்றங்கள் மிக விரைவாக செய்யப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மை, வினைத்திறன், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவௌியை குறைத்து டிஜிட்டல் மயமாக்கல் என்பன  எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும் எனவும், அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் கடுமையாக பாடுபடுகிறோம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) தலைவரும், டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உரையாற்றுகையில், வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான திறன்களில் 75% இலங்கை கொண்டிருப்பதாக கூறினார்.

எவ்வாறாயினும், அதன்  அடிப்படையை முழுமையாக திறப்பதற்கு, நாடு எஞ்சியுள்ள இடைவெளியை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முழுமைப்படுத்த வேண்டும் என்றும் ஹான்ஸ் விஜேசூரிய கூறினார்.

பிரதேச செயலக மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தை செயல்படுத்தும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டதுடன், அடையாளரீதியாக இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

புதிய டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளின் தூதரகத்திலிருந்து பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு இணையவழி ஊடாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் அவர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பாகும் என்பதுடன், இது அவர்களின் வாழ்க்கையைப் பல வழிகளில் இலகுபடுத்தும்.

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,    ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதிய செயலாளருமான ரொஷான் கமகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

07-02-2025

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]