ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது புதல்வியினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, "இவ்விடயம் தொடர்பில் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். இதற்கு முன்னரும் நாம் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். தற்போதும் இந்நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம்.
அகிங்சாவின் கவலையும், அவருக்கு இவ்வேளையில் ஏற்படும் வேதனையையும் என்னால் நன்கு உணர முடிகின்றது. இவ்விடயம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் இயலுமான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுவோம் என அவருக்கு உறுதியளிக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்திற்குத் தேவையான சுயாதீனத்தை வழங்கி, உரிய சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு, நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது தொடர்பில் ஜனாதிபதியவர்களுடனும் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக புதியதொரு விசாரணையை ஆரம்பிப்பதற்கோ அல்லது சாட்சியங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டியேற்படின், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கோ ஆவன செய்யப்படும். தேவையெனின் புதிதாக வழக்குத் தொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், நீதியை நிலைநாட்டுவதற்கும் எடுக்கவேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2025.02.07