தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நேற்று (09) பெருந்தோட்ட அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் ரூ. 1,700/- ஆக உயர்த்தும் திட்டம் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த கூட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
தோட்டத் தொழிலைத் தொடர்ச்சியாக கொண்டுசெல்ல, தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தோட்டத் தொழிலாளர்கள் இல்லாமல் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றும், அவர்களது வாழ்க்கைச் செலவுக்கான சம்பளத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தினார்.
தொழிலாளர்களின் சார்பாக நிற்கும் ஒரு அரசியல் இயக்கமாக தோட்டத் தொழிலாளர்களின் இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கவும், ஒரு மாதத்திற்குள் நேர்மறையான பதிலை வழங்குமாறும் தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்த தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தொழில் அமைச்சர் பேராசிரியர் அணில் ஜயந்த, இந்தத் தொழில் தொழிலாளர்கள் காரணமாகவே பாதுகாக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் மூலம் அதிக உற்பத்தித்திறனை அடைவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்பட வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிப்பதுடன், தொழில்துறையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.


