ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த வருடம் (2025) பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகளின் பாடசாலை வளாகங்களை துப்பரவு செய்து பழுதடைந்த கதிரை மேசைகள் உட்பட பாடசாலை உபகரணங்களை பழுதுபார்க்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
"நாட்டை கட்டியெழுப்பும் தலைமுறையின் - முதல் இணைப்பாக அமைவோம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் இச்செயற்திட்டம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்குத் தேவையான ஆள்பல பங்களிப்பு முப்படைகளினால் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட 200 பாடசாலைகள் புனரமைக்கப்படவுள்ளதுடன், நேற்று (பெப்ரவரி 20) இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு, மேல்/ மகா/ இழுக்ஓவிட்ட ஆரம்பப் பாடசாலை, இலங்கை இராணுவம், மேல்/கொ/ மோதரை ஆனந்த மத்திய மகா வித்தியாலயம், இலங்கை கடற்படை மற்றும் மேல்/மஹவத்தை புனித அந்தோனியார் சிங்களக் கல்லூரி, இலங்கை விமான படையின் பங்கேற்புடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் முப்படை தளபதிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பங்குபற்றியதுடன், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட , பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் பூரண பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.