உலக சுற்றாடல் தின தேசிய கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தை கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கேகாலை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக சுற்றாடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, இது குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (15) கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு சுற்றாடல் தினம் 'பிளாஸ்டிக் மாசடைதலை முடிவுக்குக் கொண்டுவருதல்' ("Ending plastic pollution") என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட உள்ளது.
இதற்கமைய, மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தி, இந்த வாரத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
மே மாதம் 30 ஆம் திகதி பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ தினமாகவும், 31 ஆம் திகதி காற்று மாசடைதல் மற்றும் அதன் பாதகமான விளைவுகள் குறைப்பு நாளாகவும், ஜூன் மாதம் 01 ஆம் திகதி சுற்றாடல் தூய்மை விழிப்புணர்வு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.