சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, உள்ளூர் அறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தி சரியான முறையிலும், தரநிலைகளின்படியும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதன் மூலமும், தொழில்துறையினரை ஊக்குவிப்பதன் மூலமும், நாட்டின் சுகாதார அமைப்பு தொடர்ந்து அறுவை சிகிச்சை துணியைப் பெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார்.
அதன்படி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருத்துவ விநியோகப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் நாட்டில் அறுவை சிகிச்சை துணி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட 300 பேரை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் சுகாதார அமைச்சில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
நாட்டில் அறுவை சிகிச்சை துணி உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட 300 உற்பத்தியாளர்களில் 90 சதவீதம் பேர் உள்நாட்டிலேயே இந்தத் தொழிலை புரிவதால், உயர் தரத்தின் கீழ் மருத்துவ விநியோகத் துறைக்கு இந்த தயாரிப்புகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துமாறு உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
1972 ஆம் ஆண்டு உள்ளூர் கிராமப்புறத் தொழிலாக அறுவை சிகிச்சை துணி உற்பத்தியுடன் தொடங்கி, 53 ஆண்டுகளாக மருத்துவ விநியோகத் துறைக்கு அறுவை சிகிச்சை துணியை தொடர்ந்து வழங்கியதற்காக உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்களுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறுவதன் மூலம் அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணித்தார்.
கடந்த போர், சுனாமி பேரழிவு, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத கடுமையான சூழ்நிலைகளின் போதும் கூட, மருத்துவ விநியோகத் துறைக்கு அறுவை சிகிச்சை துணிகள் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
உள்ளூர் அறுவை சிகிச்சை துணி உற்பத்தியாளர்கள், அறுவை சிகிச்சை துணி வாங்குவதில் பின்பற்றப்படும் தரநிலைகள் மற்றும் கொள்முதல் செயல்முறை களில் காணப்படும் சிக்கல்களில் மற்றும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்தை ஈர்த்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த பின்னர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பான கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தினார். மேலும் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அசேல குணவர்தன, சிறப்பு மருத்துவர் தேதுனு டயஸ், அறுவை சிகிச்சை காஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல பெரேரா, செயலாளர் கித்சிறி விக்ரமரத்ன மற்றும் உள்ளூர் அறுவை சிகிச்சை காஸ் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.