அரச ஊழியர்களாக வழங்கிய வாக்குறுதிக்கமைய பணியாற்றி 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்ற வேண்டுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழ் செயற்படும் தொழிற் கல்வி பிரிவு உட்பட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்பவற்றில் இடம்பெற்ற புதிய வருடத்திற்கான பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சின் வளாகத்திலுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் விஜயம் செய்த பிரதமர், கடமைகளின் போது அதிகாரிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தனது அவதானத்தை செலுத்தினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
நாட்டை சரி செய்யும் பணியானது அரசிற்கு, கட்சிக்கு அல்லது அரசியல் அதிகாரத்திற்கு மாத்திரம் செய்யக்கூடிய ஒன்றல்ல. அதற்கென நாட்டு மக்கள் உட்பட நாட்டின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும்.
அரச ஊழியர்களாக மக்களுக்கு சேவையாற்றும் விசேட பொறுப்பு உங்களுக்குள்ளது. சூழலை சுத்தப்படுத்துவது மாத்திரம் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் நோக்கம் அல்ல. மக்கள் சமூகத்தின் எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் இதில் உள்ளடங்கும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு இது தொடர்பில் விசேட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச சேவை தொடர்பில் காணப்படும் மோசமான சித்தரிப்பை மாற்றி நல்லதொரு சித்தரிப்பை ஏற்படுத்துவதற்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் இடமாக அரச சேவையை மாற்றியமைக்க வேண்டும். கல்வித் துறையில் தொழிற் கல்வியை விசேட ஒன்றாக மாற்றுவது அரசின் இலக்காகும்.
மனச்சாட்சிக்கு அமைவாக பணியாற்ற நாம் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்ற அபிப்பிராயத்தைக் கொண்டுள்ள அரச ஊழியர்களுக்கு உச்சகட்ட ஒத்துழைப்பையும், பாதுகாப்பையும் நாம் வழங்குவோம்.
சிறந்த பண்புகளைக் கொண்ட கல்வி முறையை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலம் கல்வியின் ஊடாக அறிவு பரிணாமத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான பல நிறுவனங்கள் கல்வியமைச்சிற்கு சொந்தமானதாக உள்ளன. தொழிலை மாத்திரம் செய்யும் பட்டதாரியாக அன்றி, நாட்டை மாற்றியமைக்கக்கூடிய அறிவு கூர்மையுடைய மற்றும் கலாசார கடமைகளை நிறைவேற்றும் பட்டதாரியே நாட்டிற்கு தேவையென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவன பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் ஊடக பிரிவு
2025.01.02