வடமத்திய மாகாணசபை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வடமத்திய மாகாணசபையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற பரிந்துரை
2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகளைப் புனரமைப்பதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வடமத்திய மாகாண சபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வடமத்திய மாகாணசபையின் அதிகாரிகளுக்கு அண்மையில் பரிந்துரைத்தது.
2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 53 வீதிகளைப் புனரமைப்பதில் வடமத்திய மாகாண சபையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வு தலைமையதிபதியினால் முன்வைக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் 2025 ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற கோபா குழு கூட்டத்தில் ஆராயப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்தது.
இந்த நிலையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (03) பாராளுமன்றத்தில் கூடியபோதே மேற்குறிந்த பரிந்துரை வழங்கப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் திகதி நடைபெற்ற கோபா குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த முறைகேட்டுடன் சம்பந்தப்பட்ட 10 அதிகாரிகளிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பணம் இதுவரை அறவிடப்படவில்லையென்றும், இதில் சிலர் தற்பொழுது உயிருடன் இல்லையென்றும், ஏனையவர்களிடம் அறவிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் பதிலளித்தனர். இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியம் குறித்து குழுவில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கான அரங்கமொன்றை அமைப்பதற்கான திட்டம் பூர்த்தியாக்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமையும் இங்கு தெரியவந்தது. இத்திட்டத்திற்காக செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தை முன்னெடுத்த ஒப்பந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அதனை ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு அறிவிக்குமாறு கோபா குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், வடமத்திய மாகாண சுற்றுலாத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தரமான ஆவணப்படமொன்றைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத் தொகையான ரூ.15,797,500 இல் ரூ.12,144,500 செலுத்தப்பட்டுள்ளபோதும் எவ்வித வீடியோவும் ஒப்பந்த நிறுவனத்தினால் கையளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. குறித்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது வெற்றியளிக்கவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டனர். இது விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆற்றுப்படுத்துமாறு குழு அறிவுறுத்தியது.
பொலன்னறுவை பொது வர்த்தகக் கட்டடத்தொகுதியின் கட்டுமானப் பணிகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தொகை பணத்தைச் செலவு செய்து ஒப்பந்த நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமை நாட்டுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். பலுகஸ்தமன மகா வித்தியாலயத்திற்கான அரங்கக் கட்டுமானத்துடன் தொடர்புபட்ட ஒப்பந்த நிறுவனமே இக்கட்டடத் தொகுதியின் ஒப்பந்தத்தையும் முன்னெடுத்துள்ளது. எனவே, இந்த ஒப்பந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியது பற்றி இங்கு வலியுறுத்தப்பட்டது. இது பற்றி விசாரணைகளை முன்னெடுத்து ஒரு மாத காலத்திற்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், வடமத்திய மாகாணத்திற்கு ரயில் மூலம் அனுப்பப்பட்ட திரிபோஷா பக்கற் தொகுதிகள் உரிய நேரத்தில் பெறப்படாது ரயில் திணைக்களத்தின் களஞ்சியத்தில் இருந்தமையால் காலவதியாகியமை, அதிலுள்ள சில பக்கற்றுக்கள் காணாமல் போனமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இந்த சமபோஷ பொதிகளின் பெறுமதி ரூ.1,094,657 என்பதும் இங்கு தெரியவந்தது. இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிரான மாகாண சபையினால் விசாரணை நடத்தப்பட்டபோதும் இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த விடயம் தொடர்பில் உள்ளக கணக்காய்வு விசாரணை நடத்துவதுடன், அமைச்சு மட்டத்திலான விசாரணைகளையும் முன்னெடுத்து அதனைக் குழுவுக்கு அறிவிக்குமாறும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இக்குழுக் கூட்டத்தில் கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, நளின் ஹேவகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, சுசந்த குமார நவரத்ன, டி.கே. ஜயசுந்தர, ஜே.சி அலவத்துவல, சுனில் ரத்னசிறி மற்றும் சானக மதுகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.


