விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாராளுமன்ற செயலாளர் தலைமையில்

விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாராளுமன்ற செயலாளர் தலைமையில்
  • :
கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ சின்னஞ்சூட்டும் நிகழ்வு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களின் தலைமையில் கடந்த 24ஆம் திகதி கல்லூரியின் ஜெமியஸ் தியெஸ் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் கொழும்பு கல்வி வலயத்தின் பிரதிப் பணிப்பாளர் (திட்டமிடல் மற்றும் சமூகவிஞ்ஞானம்) ஹசினி விஜேவிக்ரம மற்றும் விசாகா கல்லூரியின் அதிபர் மனோமி செனவிரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம், இந்நாட்டின் தற்போதைய சமூக, பொருளாதார, அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பு திருப்தியடையும் வகையில் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியதுடன், சட்டவாக்கச் செயற்பாடுகள் குறித்து மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அத்துடன், விசாகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் தங்கள் பாடசாலை வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்துடன், நாட்டின் முக்கிய துறைகளுக்கு முழு அளவில் பங்களிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் பங்கேற்ற விசாகா வித்தியாலயத்தின் அதிபர் மனோமி செனவிரத்ன, உரையாற்றுகையில் கல்லூரி மாணவர்களின் தலைமைத்துவ திறன்களையொட்டிப் பெருமைப்படுவதாகக் கூறினார். தலைவரின் வழிகாட்டலில் ஏனையவர்களும் பின்தொடர்வதில் குழு மனப்பான்மையுடன் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 2024/25 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலையின் தேவைகளைக் கண்டறிந்து முன்னேறிய விதம் குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கல்லூரியின் பிரதி அதிபர் துலானி பிரியதர்ஷனி மற்றும் மாணவர் பாராளுமன்றத்தின் பொறுப்பாசிரியர் அனுஷா ஏக்கநாயக்க ஆகியோருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
 
விசாகா வித்தியாலயத்தின் 2025/2026ற்கான மாணவர் பாராளுமன்றத்தின் புதிய பிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றதுடன், கல்லூரி அதிபர் மனோமி செனவிரத்ன மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் சின்னஞ்சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
 
விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சின்னம் சின்னஞ்சூட்டும் விழாவின் முடிவில், 2025/26 ஆம் ஆண்டுக்கான பிரதமர், 2024/25 மாணவர் பாராளுமன்ற சபாநாயகரிடமிருந்து அடையாளமாக செங்கோலைப் பெற்றார்.

Related Articles