விசேட கல்வித்துறை மற்றும் விசேட பாடசாலைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது

விசேட கல்வித்துறை மற்றும் விசேட பாடசாலைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது
  • :
இயலாமையுடைய நபர்களுக்கான விசேட கல்வி மற்றும் விசேட பாடசாலைகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள்
மற்றும் இத்துறையில் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியபோதே இது பற்றிய இடம்பெற்றதுடன், இதில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சரத் ஆனந்த உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
 
புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறையின் போது விசேட கல்வித் துறையும் பிரதான அங்கமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது. இயலாமையுடைய மாணவர்களின் கற்றல் திறன்கள் மற்றும் அவர்களது கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேலும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்ட கல்வி முறைமையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், விசேட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் நிர்வாக மற்றும் தொழில்சார் பிரச்சினைகள், பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடைய சவால்கள், பாடத்திட்ட மேம்பாடு, விசேட தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்குப் பொருத்தமான மதிப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
விசேட கல்விக்கான துறையில் நடைமுறை அனுபவமுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளும் பரிந்துரைகளும் எதிர்கால கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் போது கருத்திற்கொள்ளப்படும் என தேசிய கல்வி ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
அத்துடன், எதிர்காலத்தில் இவ்விடயம் தொடர்பாக நடத்தப்படவுள்ள கலந்துரையாடல்களில் விசேட பாடசாலைகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்வதற்கும், இயலாமையுடைய நபர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கல்வி ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் திலக் தர்மரத்ன, கல்வி அமைச்சின் முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவின் அதிகாரிகள், இயலாமையுடைய மாணவர்களுக்கான விசேட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் அப்பாடசாலைகளின் நிர்வாகிககள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles