16 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் (23.01.2026) முற்றவெளி மைதானத்தில் காலை 10.30 மணியளவில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
"பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்" எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை தொடர்ந்து 24 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களிலும் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந் நிலையில், இதன் தொடக்க விழா நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
தொடக்க விழாவைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மங்கல வாத்தியங்களுடன் யாழ். முற்றவெளி மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் கெளரவ ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமக, பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி, லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அர்ஜுன் தர்மதாச மற்றும் பணிப்பாளர் திரு. ஏ.எப்.எம். பாரூக், யாழ்ப்பாண வணிகர் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் திரு. குலசிங்கம் வசீகரன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி திரு. கே.விக்னேஷ், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் திரு. இமால்கா முல்லேகம, வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களால் நாடா வெட்டி கண்காட்சிக் கூடங்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து விருந்தினர்கள் வர்த்தகக் கூடங்களைப் பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தினர் ஏற்பாட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண் காட்சியானது இம்முறை 16 ஆவது தடவையாக மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இங்கு விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு, நவநாகரி கம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறு வனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 400 க்கு மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


