யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா இன்று (15) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
1923ஆம் ஆண்டு அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தக் கலாசாலை 2023ஆம் ஆண்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்தது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...
"கல்வி சீர்திருத்தத்தில் ஆசிரியர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர். கல்வி என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான சிறந்ததும் வலுவானதுமான உறவாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களின் பலத்துடன் நிகழ வேண்டும்.
எமது அரசாங்கத்தின் கீழ், ஆசிரியர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படுகிறது. ஆசிரியர்களின் பயிற்சி செயன்முறை நெறிப்படுத்தப்பட்டு திறன்கள் விருத்திசெய்யப்பட வேண்டும். இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள கல்விப் பேரவையொன்றையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அதன் மூலம் கல்வித் துறையின் தரத்தை உயர்த்தி அதை முகாமைத்துவம் செய்ய முடியும். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். "
இங்கு பிரதமர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விசேட அதிதிகள் நினைவுக் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் பதிவுசெய்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ மற்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2025.02.16