2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கையின் போது விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பதில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் கையாள்வது குறித்த மாவட்ட உரக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (27) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரை மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய உரச் செயலகத்தின் மாவட்டத்திற்கான பிரதி பணிப்பாளர் எச். ஜி. எஸ். பிரேமரத்ன அவர்கள், திருகோணமலை மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் சாதனைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான இலக்குகள் தொடர்பாக அரசாங்க அதிபரால் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலக உயரதிகாரிகள், உரத்தினை இறக்குமதி செய்து விநியோகிக்கும் அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன் மூலம் சிறுபோகத்தில் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எவ்வித தடையுமின்றி பயிர்ச்செய்கையில் ஈடுபட வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


