யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல்
நேற்று முன்தினம் (20.06.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று முக்கியமான துறையாக நீதித்துறை இருக்கின்றது. நீதித்துறையிலிருந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு எமது அரசாங்கம் பயணிக்கிறது. காணாமல் போன உறவுகளின் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவர்களை சாதாரண மக்களைப் போல் கருதி விட முடியாது. அவர்கள் பல்வேறு சவால்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறார்கள். இவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களை அணுகுகின்ற காணாமல் போனோர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் நீண்ட நிலவிய யுத்த அசாதாரண நிலைகளால் இன்றும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றோம். அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் இன்றும் காணப்படுகின்றார்கள். காணாமல் போன உறவுகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றார்கள். நீதிக்கான பயணத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். யாழ் மாவட்ட அலுவலகத்தில் மட்டும் 2,452 பேர் காணாமல் போன அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு பதிவு செய்யாமலும் பலர் இருக்கலாம். இவர்களின் உணர்வுகளை கூற முடியாது இத் தகவல்கள் இது சாதாரண விடயம் அல்ல. இன்றும் ஆயிரக்கணக்கான உறவுகள் தமது உறவுகளின் வருகைக்காக எதிர்பார்புடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட விடயம் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணப்படுகிறது. எமது நாட்டின் ஜனாதிபதியின் மூத்த சகோதரன் கூட காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். அவருடைய தாயார் இன்றும் தனது மூத்த மகனின் வருகைக்காக பூஜை வழிபாடுகளுடன் காத்துக் கொண்டிருப்பது போல பல தாய்மார்கள் தமது பிள்ளைகளின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் உறவுகளின் ஏக்கம்.
மேலும் மக்களுடைய உடல் காயங்களை மருந்தால் குணப்படுத்த முடியும். ஆனால் உளகாயங்களை குணப்படுத்த முடியாது. இதற்கு அன்பு தான் சிறந்த மருந்து. இவர்கள் நீண்ட காலமாக துன்பத்திலிருந்து மீளாதிருக்கிறார்கள். நீதி அமைச்சர் குறிப்பிட்டது போல நட்ட ஈடு அல்லது பணமோ இவர்களின் மன உளைச்சலுக்கு, துன்பத்திற்கு தீர்வாகாது. இவர்களது பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கம் செயற்படுகிறது. காணாமல் போனோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளித்துவருகின்றது. மேலும் காணாமல் போனோரின் பட்டியல் தொடர்ச்சியாக இருந்தாலும் கடந்த ஒன்டரை வருடங்களாக பதிவாகவில்லை. சோதனை சாவடிகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் அச்சத்தை போக்கி நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக சோதனை சாவடிகளை அகற்ற எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக சிந்திக்க வேண்டும். இவ்விடத்தில் அரசாங்கம் யதார்த்தமான தீர்வுகளைக் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
ஊடகப் பிரிவு,


