முல்லைத்தீவு மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம் நேற்று (31) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முதலில் சுற்றுச்சூழல் கூட்டம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மற்றும் மாவட்டத்தின் நகரங்கள், பிரதேசங்கள் மற்றும் கிராமங்களை கடற்கரைகளை தூய்மையாக வைத்திருத்தல், கனிய வளங்களை முறையாக அடையாளம் காணுதல் மற்றும் பாதுகாத்தல், முறையான அனுமதி, சிபார்சு இல்லாமல் மண் மணல் மற்றும் கிரவல் அகழ்வை நிறுத்துதல், சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல், தூய்மையான இலங்கை எண்ணக்கருவிற்கு அமைய நிலைபேறான சுற்றுச்சூழல் முறைமையைப் பேணுதல் முதலான விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கடந்தமுறை ஏற்பட்ட டித்வா புயல் வெள்ளப் பாதிப்புக்கள் அவற்றுக்கான நிவாரணங்கள் மீள் புனர்நிர்மாணம் முதலான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் இந்த ஆண்டு அனர்த்தத்தினை எவ்வாறு எதிர்கொள்வது, முன்னாயத்த வேலைகள், தற்போது எதிர்வுகூறப்பட்டுள்ள அதிக வெப்பம் மற்றும் வரட்சி அதனால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.


