யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த பாடசாலை ஊடகக் கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாட ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு இன்றையதினம்(12.06.2026) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க தகவல் திணைக்களம் தரமான ஊடக அறிவுள்ள பாடசாலை சமூகத்தை உருவாக்கும் நோக்கில் துறைசார் ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் மாகாண நிகழ்ச்சித் திட்டம் - 2026 இன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளில் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகள் பாடத்தினை கற்பிக்கும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன், அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் ஊடகத்துறையின் வளர்ச்சி மற்றும் அதன் செயற்பாடுகள் சகல துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், தற்போது Al தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சகல துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துகிறது. இந் நிலையில் ஊடக விளங்கறிவு அவசியமானதொன்றாகும். இது தொடர்பாக மாணவர்களுக்கு சரியான தெளிவூட்டலை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும், இதன் அடிப்படையிலேயே பாடசாலைகளில் ஊடகக் கழகங்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒரு ஊடகத்தின் செயற்பாடானது வெறுமனே தனது வருமானத்தை அதிகரிப்பதை மட்டுமல்லாமல் சமூக நன்மையை கருத்தில் கொண்டு அதன் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்றும், ஊடக துறையின் வளர்ச்சியானது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும் அதன் சில செயற்பாடுகள் சமூக சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன எனவும், இது தொடர்பில் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் செய்தி உண்மையானதா மாறாக அது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மைக்கு முரணாக எழுதப்பட்டுள்ளதா என்பதை பிரித்தறியும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தெளிவினை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டார அவர்களின் விசேட உரை காணொளி ஊடாக பகிரப்பட்டது.
தொடர்ந்து நவீன ஊடகப் போக்குகள், ஊடகப் பண்பாடு செல்நெறி மற்றும் ஊடகக் கற்கைகளின் தற்போதைய முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகிய எண்ணக்கருக்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் பேராசிரியர் எஸ்.ரகுராம் அவர்கள் விரிவுரையாற்றினார்.
ஊடக ஒழுங்குமுறை, ஊடக ஒழுங்குப்படுத்தலின் தேவை மற்றும் சமூக ஊடக அறிவு (Social Media Literacy) குறித்து ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் திருமதி. பூங்குழலி ஸ்ரீசங்கீர்த்தனன் அவர்கள் விளக்கமளித்தார்.
மேலும் ஊடகக் கழகங்களுக்கான மூலோபாயத் திட்டமிடல் மற்றும் மாணவர்களின் ஆளுமை விருத்தியில் ஊடகக் கழகங்களின் வகிபாகம் குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் உத்தியோகத்தர் திரு. எஸ்.ஏ.எம்.பவாஸ் உரையாற்றினார்.
தொடர்ந்து ஒலி - ஒளி காட்சிப்படுத்தலும் கலையகப் பணிகளும், இன்றைய காலத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் மொபைல் ஊடகவியல் (Mobile Journalism - MOJO) தொடர்பில் ஊடகக் கற்கைகள் துறையின் Audio Visuual தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. த.சிவனேசன் அவர்களினால் செய்முறை ரீதியில் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளர்கள், மாவட்ட ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


