எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை
  • :

• குற்றவாளிகள் முறையாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
• ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது
• எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் நோக்கத்திற்கு இணங்க, இந்த நாட்டை ஒரு நாகரீகமான நாடாக மாற்றுவோம்.
• பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடம் நீக்கப்படும்.
• நீண்டகால நிலையான பயணத்தில் நாடு கால்பதித்துள்ளது.

பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம் அந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு அரசாங்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை எனவும், குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு நிறைவேற்றப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று (25) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையின் நோக்கம் ஒரு நாகரீகமான நாட்டை கட்டியெழுப்புவதாகும் என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் இடம்பெறாது எனவும், ஜனாதிபதி முதல் அடிமட்ட அரசியல் தலைமை வரையிலும், ஜனாதிபதி செயலாளர் முதல் அடிமட்ட அரச அதிகாரி வரையிலும் உள்ள அனைவரும் இந்த நாகரீகமான நாட்டின் பங்காளிகளாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அதேபோல், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குழுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் தற்போது பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இன்று நாடு நீண்டகால நிலையான பயணத்தை நோக்கி கால்பதித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

போதைப் பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் நீண்டகாலமாக வளர்ச்சியடைந்து சமூகத்தை பீதிக்குள்ளாக்கி வருவதோடு போதைப் பொருட்களினால் சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒடுக்கவும் பங்களிப்பது அனைவரினதும் பொறுப்பாகும். குறிப்பாக, இந்தப் போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் உருவாகுவதும் வளர்ச்சியடைவதன் பின்னணியில் தொடர்புள்ள பாரிய வலையமைப்பு உள்ளது.

இந்தப் போதைப் பொருட்களையும் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஒடுக்குவதற்கு அதனுடன் தொடர்புள்ள முழுமையான துறை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். திட்ட மிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளோர் போதைப் பொருள் வர்த்தகர்கள் அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்குள் பரவியிருந்து மோசடி, அரசிற்குள் இயங்கிய அரச தரப்பு நோக்கிலான அமைப்புகள் மற்றும் அரசியல் அனைத்தையும் ஒடுக்குவதன் ஊடாகத் தான் இதனை ஒழிக்க முடியும்.

போதைப் பொருள் சுற்றிவளைப்பு மற்றும் பாதாள உலகத்தினரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் மாத்திரம் போதுமானதல்ல. நான் முன்னர் குறிப்பிட்ட தலையீடுகளினால் தான் இவை வளர்ச்சியடைந்தன. இவை அனைத்தையும் ஒழிக்க நாம் முடிவு செய்துள்ளோம். இந்த பணியில் பாரியளவு பங்காற்றும் தரப்பினர் உள்ளனர். துரதிஸ்டவசமாக எதிர் கட்சியின் பிரதான குற்றவாளிகளாக அவர்கள் மாறியுள்ளனர். இந்த மோசடி, திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப் பொருள் வர்த்தகர்கள், அரச பொறிமுறைக்குள் செயற்பட்ட குற்றச் செயல்கள்,அரசியல் என அனைத்தையும் ஒடுக்க வேண்டும். இதனை ஒடுக்குவதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதற்கான அரச நிறுவனங்களும் உள்ளன. நிறுவனங்கள் இருந்து பயனில்லை அந்த நிறுவனங்களுக்கு நேரடித் தலைமைத்துவம் வழங்கி அதனை தோற்கடிக்கக் கூடிய அரச பொறிமுறை எமக்கு அவசியம். ஆனால் துரதிஸ்டவசமாக இந்தப் பணிக்கு அர்ப்பணிக்கும் நபர்கள் தான் இன்று எதிரணியின் பிரதான எதிரிகளாகவும் இலக்காகவும் மாறியுள்ளனர்.

இந்தப் பணியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சானி அபேசேகர பெரும் பங்காற்றுகிறார். அவர் எதிர்த் தரப்பின் எதிரி. இதில் இலஞ்ச ஊழல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க பாரிய பங்காற்றுகிறார். அவரும் எதிரணியின் எதிரி. இந்தப் பணியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பெரும் பங்காற்றுகிறார். அவரும் எதிரணியின் எதிரியாக உள்ளார். அதே போன்று அமைச்சர் ஆனந்த விஜேபால பெரும் பங்காற்றி வருகிறார். அவரும் எதிரணியினால் எதிரியாகப் பார்க்கப்படுகிறார். இந்தப் பணியில் சட்டமா அதிபர் திணைக்கள திலீப பீரிஸ் அதிக பங்காற்றுகிறார். அவரும் எதிரிணியின் எதிரி. இதில் நீதிமன்றம் பெரும் பங்குவகித்து வருகிறது. நீதிமன்றமும் இன்று எதிரிணியின் எதிரியாகியுள்ளது. அது ஏன்? நீதி, நியாயம், நாகரிகத்தை ஏற்படுத்த ஏற்படுத்தும் முயற்சியை எதிரிணியால் ஜீரணிக்க முடியவில்லை. நீதி, நியாயம்,ஜனநாயகம்,நல்லாட்சி எதுவும் எதிரணிக்கு பிடிக்கவில்லை. இது தான் உண்மை.

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரச அனுசரணையுடன் குற்றம் செய்த நபர்களை அம்பலப்படுத்தத் தேவையில்லையா? அது காட்டிக் கொடுப்பா அல்லது தேசத் துரோகமா? இல்லை .அது நாகரிகமான நாடொன்றை உருவாக்குவதற்கான நோக்கமே அதிலுள்ளது. எமது நாட்டை நாகரிகமான நாடாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி முதல் அடிமட்டத்தில் உள்ள அரசியல் தலைமை வரையும் ஜனாதிபதி செயலாளர் முதல் அடிமட்ட அரச உத்தியோகஸ்தர் வரைக்கும் அனைவரையும் நாகரிகமான நாட்டின் பங்காளர்களாக மாற்ற வேண்டும். ஆனால் எமது நாடு அநாகரிகமான நாடாகவே இருந்தது. எமது இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவு தோடர்பிலான கௌரமும் பாராட்டும் எமது உள்ளங்களில் இருக்கிறது. ஆனால் எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயலாற்றி இருக்கையில் எங்காவது அவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் நாம் அவர்களுக்காக முன்நிற்போம்.

தேசிய மட்டத்திலோ சர்வதேச மட்டத்திலோ நாட்டின் இருப்பிற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயலாற்றியிருக்கும் நிலையில் அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அதனை மேற்கொள்வோம். ஆனால் எமது இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவில் உள்ள சில குழுக்கள் அரசாங்கத்தின் தேவைக்காக ஏதாவது குடும்பத்தின் அதிகாரத்திற்காக அல்லது ஏதேனும் அரசியல் தரப்பின் அதிகாரத்திற்காக செயற்பட்டிருந்தால் அதற்கு உரிய தண்டனை வழங்கவும் எமது அரசாங்கம் பின்நிற்காது. எமது இராணுவத்தின் கௌரவித்திற்காவும் நாகரிகமான நாட்டை கட்டியெழுப்புவதற்காகவும் எமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் இதனை செய்ய வேண்டும்.

எமது நாட்டில் அப்படியான சம்பவங்கள் நடக்கவில்லையா? லசந்த விக்ரமதுங்க எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்? அது சாதாரண சிவில் குடிமக்களுக்கு இடையிலான மோதல் அல்ல. அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஊடகவியலாளர் படுகொலை செய்யப்படுகிறார். அறிக்கைகளின்படி, புலனாய்வுப் பிரிவினர் அதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை மறைக்கப்பட வேண்டுமா? தேவையில்லை. கீத் நோயர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்படுகிறார். அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தது இராணுவத்தின் ஒரு பாதுகாப்பு விடுதி என்று தெரிவிக்கப்படுகிறது. உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. போத்தல ஜயந்த மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாமல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவை சிவில் மோதல்கள் அல்ல. இவை ஒரு அரசு, தனது அதிகாரத்தை ஒரு குடும்பத்திற்காகவும் தனது அரசியல் முகாமின் அதிகாரத்திற்காகவும் செய்த குற்றங்களாகும். தாஜுதீனின் படுகொலையும் அவ்வாறானது தான். உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அவ்வாறானது தான்.

சிரச நிறுவனத்திற்குத் தீ வைக்கப்படுகிறது.இறுதின காரியாலயங்களுக்குத் தீ வைக்கப்படுகிறது. சியத நிறுவனத்தின் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இப்படியொரு வரலாறு இருக்கிறது. இவை அனைத்திற்கும் பின்னால் மிகச் சிறியதொரு அரச இயந்திரத்தின் செயற்பாட்டாளர்கள் இருந்தார்கள். இதனை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டாமா?

நாட்டில் "வெள்ளை வேன்" பீதி இருக்கவில்லையா ? இலக்கத் தகடுகள் இல்லாத வெள்ளை வேன்களில் வந்து, தோட்டத்தில் தங்களது வீடுகளை உடைப்பதற்கு எதிராகப் போராடியவர்கள் கடத்திச் செல்லப்படவில்லையா? இவை சாதாரண சிவில் மோதல்கள் அல்ல. அப்படியாயின் இவை என்ன? இவை ஒரு அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காகவும், அரசின் இருப்பிற்காகவும் பாதுகாக்க வேண்டிய படைகளின் மிகச் சிறியதொரு குழுவை, தங்களது அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தி நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை செய்துள்ளனர்.

நாம் நிச்சயமாக அந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளுக்கும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கும் எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதற்குக் கடமைப்பட்டுள்ள ஒரு அரசாங்கமாவோம். ஏன்? அந்தப் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். இராணுவத்தின் கௌரவித்திற்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். அதேபோன்று, அரசின் நாகரிகத் தன்மைக்காக நாம் இதனைச் செய்ய வேண்டும். இங்கு எவரேனும் இதற்கு எதிராக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களால் இதற்கு எதிராக இருக்க முடியுமா?
இல்லை, இதற்கு எதிராக இருக்க முடியாது. இதனை குற்றவாளிகளினால் மாத்திரமே எதிர்க்க முடியும். அந்தக் குற்றங்களின் மூலம் பலன் பெற்றவர்கள் மாத்திரமே. அந்தக் குற்றங்களின் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டவர்கள் மாத்திரமே எதிர்க்க முடியும். அந்தக் குற்றங்களின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குக் காத்திருந்தவர்கள் மாத்திரமே. வேறு எந்தவொரு சாதாரண பிரஜைக்கோ, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் மனிதர்களின் மனிதத்தன்மை மீதான கௌரவத்தைக் கொண்டுள்ள எந்தவொரு பிரஜைக்கோ இந்த விசாரணைகளுக்கு எதிராக இருக்க முடியாது.

ஷானி அபேசேகர , திலீப பீரிஸ், அதேபோன்று பொலிஸ் மா அதிபர் , அதேபோன்று நீதிமன்றத்திற்கு, ரங்க திஸாநாயக்க மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதற்காக? அவர்கள் செய்த குற்றம் என்னவென்று எனக்குக் கூறுங்கள். அவர்கள் செய்த குற்றம் என்னவெனில், இந்நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவதும், அது குறித்து விசாரணை செய்வதுமேயாகும். அதற்காக அவர்கள் குற்றவாளிகள் கிடையாது.

எனவே யாராவது ஒரு நபர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இந்த அதிகாரிகளை தனித்தனியாக அச்சுறுத்தி, தனித்தனியாகப் பயமுறுத்தி, இந்த முயற்சியை நிறுத்திவிட முடியும் என்று யாராவது நினைத்தால், இந்த முயற்சியை நிறுத்துவதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க மாட்டோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அவர்களுக்காக முன்னிற்போம்.

இந்த நாட்டின் பொது மக்கள் அவர்களுக்காக எழுந்து நிற்க வேண்டும். இந்த குற்றவாளிகளுக்காகவா முன்னிற்கிறீர்கள்? நாங்கள் இந்த நாட்டின் பொது மக்களுக்காக முன்னிற்க வேண்டும். அதற்காக நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

அதேபோன்று, இதனுடன் பிணைக்கப்பட்ட ஒரு அரசியல் இருந்தது. குற்றவாளிகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக பணம் பெறுகிறார்கள். ஒருவர் கைது செய்யப்பட்டால் முறையான வழிமுறையின்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், கொல்வதற்காக பணம் பெறுகிறார்கள். மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி பணம் பெறுகிறார்கள். அதற்கு கட்சி பேதமில்லை . அவை என்னவென்று உங்களுக்கு வெளிப்படும் . கொல்லாமல் இருக்க பணம் கொடுக்கப்பட்டது. மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பணம் கொடுக்கப்பட்டது.பி.டி.ஏ யில் இலிருந்து அகற்றுவதற்கு பணம் கொடுக்கப்பட்டது. இப்படித்தான் அரசியல் கட்டமைப்பு இவற்றுடன் தொடர்புபடுகிறது.

இவை காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்றுசிலர் நினைத்தார்கள் . காலப்போக்கில் இவற்றை மறக்கடிக்க இடமளிக்க மாட்டோம். குற்றவாளிகளை முறையான வகையில் சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் எமது அரசாங்கத்தின் பொறுப்பு. விசாரணை செய்து, கைது செய்து, சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக நாங்கள் தண்டனையைப் பெற்றுக்கொடுப்போம். ஆனால் கைது செய்யப்படுபவர்களைக் கொலை செய்யும் ஒரு வரலாறு இருந்தது. கொலையிலிருந்து காப்பாற்றுவதற்காகக் கப்பம் பெற்ற ஒரு வரலாறு இருந்தது. இன்று காலை கைது செய்யப்பட்ட குழுவின் ரகசியங்கள் என்னவென்று அம்பலமாகும். இனிமேலும் இது போன்றவர்களை உங்கள் கட்சியில் வைத்திருப்பீர்களா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

அதேபோல், சிறைச்சாலையிலிருக்கும் ஒரு போதைப்பொருள் வியாபாரியுடன் தொண்ணூற்று இரண்டு தடவைகள் ஒரு அரசியல் தலைவர் பேசியிருக்கிறார். 54 தடவைகள் அவர் அழைப்பெடுத்துள்ளார். ஏனைய அழைப்புகள் அவரிடமிருந்து இவருக்கு வந்திருக்கின்றது. இவ்வாறானவர்களை இன்னும் உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்களா ? குறைந்தபட்சம் கட்சிக்குள் ஒழுக்காற்றுப் பரிசோதனையாவது செய்தீர்களா என்று எனக்குத் தெரியாது. இந்த அரசியல் அதிகாரம், இந்த போதைப்பொருள், இந்த போதைப்பொருள் கடத்தல், இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை வளர்ப்பதற்காகத் துணையாக இருந்திருக்கின்றது. நாங்கள் முழுமையாக அரசியல் அதிகாரம் இதற்கு வழங்கும் பாதுகாப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவோம். யாரும் இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூற வேண்டாம்.

எங்களுக்கு எதற்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? எமக்கு வழங்கப்பட்ட பாரிய மக்கள் ஆணைக்குள் ஒரு நோக்கம் இருந்தது. எமது அரசை நாகரீகமானதாக மாற்றுவது தான் அந்த நோக்கமாகும்.. இந்த பாராளுமன்றம் நாகரீகமானதாக இருக்க வேண்டும். செவிமடுக்க வேண்டும், விடயங்களை முன்வைக்க வேண்டும். நாகரீகமான போக்கு இங்கு தேவைப்படுகின்றது. நாகரீகமான தன்மை இல்லாமல் போவது ஏன்? உங்களுக்கு நேரடியான தலைமைத்துவம் தேவை . உங்களுடைய உத்தரவுகளுக்கு எம்.பிகள் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டும் . ஆனால் இந்தப் பாராளுமன்றத்தை அநாகரீகமான நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள் . நாட்டின் அரசியலையும் அநாகரீகமான நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மீண்டும் இந்த நாட்டை நாகரீகமான பாதைக்குக் கொண்டு வரும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாராளுமன்றத்திலும் அரச நிறுவனங்களுக்குள்ளேயும் இவை அனைத்திற்குள்ளுமே மீண்டும் நாகரீகத்தைக் கொண்டுவரும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஊழல் குறித்து நீண்ட காலமாக எமது தேர்தல் மேடைகளில் விவாதிக்கப்பட்டது. ஊழல் செய்த பணம் எவ்வாறு வெளியேற்றப்பட்டது என்று நாம் வெளிப்படுத்தியுள்ளோம். பொதுவாக டி.டி. முறையின் ஊடாக பணம் செலுத்தப்பட்டும் பொருட்கள் வரவில்லை. 2023 இலிருந்து இதுவரையான காலப்பகுதியில் டி.டி. ஊடாகக் டொலர் பில்லியன் வரை முற்கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொருட்கள் வரவில்லை. டொலர் பில்லியன் என்பது சுமார் 300 பில்லியன் ரூபாய். 300 பில்லியன் ரூபாய் பணத்தை சாதாரண ஒருவரால் கொண்டுசெல்ல முடியாது. சாதாரண ஒரு வர்த்தகரால் 300 பில்லியனை நாட்டிலிருந்து கடத்த முடியாது. ஆனால் கடத்தியிருக்கிறார்கள். இதற்குள் போதைப்பொருள் பணம் இருக்கின்றது, ஊழலால் சம்பாதித்த பணம் இருக்கின்றது, குற்றங்களால் சம்பாதித்த செல்வம் இருக்கின்றது. அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டொலர் பில்லியனுக்கும் அதிகமான தொகை அனுப்பப்பட்டும் இலங்கைக்குப் பொருட்கள் வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு நெருக்கமான காலம் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன அதைத் தடுப்பதற்காக தற்போது விதிமுறைகளை மேற்கொண்டிருக்கிறோம் .

இதில் சில வங்கிகளின் தொடர்புகள் இருக்கின்றன. சில வங்கிக் கிளைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பணம் கடத்தப்பட்டிருக்கின்றது . சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்.விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன . ஊழலால் சம்பாதிக்கப்பட்ட செல்வம்தான் டொலர் ஊடாக வெளியே சென்றிருக்கின்றது. இலங்கைக்குள் சம்பாதிப்பது ரூபாய்களில் இருக்கலாம், ஆனால் நாட்டிலிருந்து டொலர்களாக கடத்தியிருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் பொருளாதாரமும், சமூகக் கட்டமைப்பும் வீழ்ச்சியடைவதற்கு அந்த ஊழல்கள் துணையாக இருந்திருக்கின்றன. அவற்றுக்கு எதிராக விசாரணைகள் செய்ய வேண்டுமல்லவா?

யாருடையதும் தனிப்பட்ட பழிவாங்கல், தனிப்பட்ட கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் தேவை எங்களுக்கு இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வருடங்களாகின்றன. பழிவாங்குவதாக இருந்தால் அதிகாரத்திற்கு வந்தவுடன் பலிவாங்கியிருக்க வேண்டும்.இது பழிவாங்கல் அல்ல. இந்த பாராளுமன்றத்தினால் ஊழல், இலஞ்சத்தை ஒழிப்பதற்காகச் சக்திவாய்ந்த சட்டங்கள் இயற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை செயற்படுத்த காலம் தேவைப்படுகின்றது. அதை விசாரணை செய்வதற்காக நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சில புலனாய்வு நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்திருந்தன.அந்தப் புலனாய்வு நிறுவனங்கள் வலுப்படுத்தியுள்ளோம். சட்டமா அதிபர் திணைக்களத்திற்குப் புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளோம். நீதிமன்றத்தில் பெருமளவு வழக்குகள் தேங்கியுள்ளன. புதிதாக ஏழு மேல் நீதிமன்றங்களை உருவாக்கினோம். இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தி முறையான வகையில் நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டிப்பதுதான் எமது எதிர்பார்ப்பு. அதை பழிவாங்கல் என்று கூற முடியுமா? அது முறையான, சட்டபூர்வமான வழிமுறையொன்றினூடாக இந்த நாட்டின் ஊழல்வாதிகளைத் தேடிச் செல்கிறோம், ஊழல்வாதிகளை நீதிமன்றத்தின் முன்நிறுத்துகிறோம்.

ஊழலால் சம்பாதிக்கப்படும் செல்வம், பாதாள உலக, இந்த போதைப்பொருள் வியாபாரிகளுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக இல்லை. போதைப்பொருள் பணம், குற்றவாளிகளின் பணம், ஊழலால் சம்பாதிக்கப்படும் பணம் என அனைத்துப் பணமும் டி.டி. ஊடாக, வெளியில் சென்றிருக்கின்றது.

எனவே நாங்கள் இந்த ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளில் பிரதான பொறுப்பை இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு நிறைவேற்றி வருகிறது. அதேபோல் எப்.சி.ஐ.டி. நிறுவனத்தினால் , சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த நிறுவனங்களிலிருக்கும் புகழ்பெற்ற, அதற்காகத் தலையிடும் அதிகாரிகளைப் பின்தொடர்ந்து சென்று எதிரணி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கொள்ளையடிக்க இடமளியுங்கள், கொள்ளையடிக்கும் நபரைத் தண்டிக்க வேண்டாம் என்ற செய்தியைத்தான் இவர்கள் தருகிறார்கள்.

பொதுமக்களின் செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களுக்குத் தண்டிக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு கட்சி பேதம் இருக்கவில்லை . பொதுமக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்த நபரைத் தண்டிப்பது குறித்து கட்சி பேதம் இருந்ததா? வடக்கா தெற்கா என்று பேதம் இருந்ததா? பொது மக்களின் எதிர்பார்ப்பு அது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை முன்னிறுத்தி அரசாங்கங்களுக்கு வாக்களிக்கிறார்கள், ஆனால் அரசாங்கம் குறுகிய காலத்தில் அதே திருட்டிலுயே ஈடுபடுகின்றது. நாங்கள் அப்படிச் செய்யமாட்டோம். நாங்கள் இந்த நாட்டின் பொது மக்களுக்கு ஊழல், மோசடி குறித்துத் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக இருக்கும் எதிர்பார்ப்புக்கு உயிர் கொடுக்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறியிருக்கின்றது, மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

Related Articles