பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்வி சுதந்திரத்திற்கு எவ்வித இடையூறுகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதில்லை என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் காணப்படும் கல்வி சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல் அரசாங்கத்தின் கொள்கை என்பதுடன், கல்வி சுதந்திரம் மற்றும் கலந்துரையாடும் சுதந்திரம் போன்றவை பல்கலைக்கழகங்களில் காணப்பட வேண்டும் என்பதுடன், பல்கலைக்கழக சபை (கவுன்சில்), உயர் பீடம் (செனட்), பெகல்ட்டி போட் (துறை சபை), மாணவர் சங்கங்கள், பல்கலைக்கழகங்களில் காணப்படுவதுடன் அவற்றின் ஊடாக கல்வியின் மற்றும் கலந்துரையாடலின் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு இதைவிட சிறந்த கலந்துரையாடலுக்கு உட்படுத்தி அவர்களை பலமானவர்களாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டை நிறுத்தப்படுவதற்கு தனது அல்லது பிரதமர் அலுவலகத்தின் எவ்வித தலையீடுகளும் இடம்பெறவில்லை என்றும் அது பொய்யான தகவல் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
பல்கலைக்கழகங்களில் இவ்வாறான உரையாடல்கள் இடம்பெற வேண்டும் என்பதுடன் கல்விச் சுதந்திரத்தை உபவேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார்.