ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership) நிறைவேற்றுப் பணிப்பாளர் டெரெக் லூய்டன் (Derek Luyten) உள்ளிட்ட குழுவினர் கடந்த 26 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை
பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் அதிகாரிகள், அவர்களது செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் போது, உலகளாவிய ரீதியில் தற்போது 15 சட்டவாக்க சபைகளுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவித்தனர். இதில் வரவுசெலவுத்திட்ட மேற்பார்வை மற்றும் நிதிப் பொறுப்பு, குழுக்களின் வினைத்திறனான செயற்பாடு, சட்ட வரைவு நடைமுறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் கொள்கை வகுத்தல் போன்ற பல்வேறு செயன்முறைகளுக்கு சட்டவாக்க சபைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது அவர்களின் நோக்கமாகும் எனத் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ சபாநாயகர், இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து தேவையான அறிவைப் பரிமாறிக்கொள்வதற்காக வருகைதந்தமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். பல்வேறு சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை அனுமதிப்பதன் மூலம் சட்டவாக்க செயன்முறை எவ்வாறு வலுவாக முன்னோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றது என்பதை சபாநாயகர் இந்தக் குழுவினருக்கு விளக்கினார். மேலும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் சட்டவாக்க சபையின் பங்கு, குழுக்கள் மற்றும் ஒன்றியங்கள் மூலம் நடைபெறும் பணிகள் ஊடாக சட்டவாக்க சபை எவ்வாறு வலுவாக செயற்படுகின்றது என்பதையும் கௌரவ சபாநாயகர் விளக்கினார்.


