இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, உபகுழு

 இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, உபகுழு
  • :

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த உபகுழுவின் ஏனைய உறுப்பினர்களாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, கிரிஷ்ணன் கலைச்செல்வி, சுஜீவ திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தலைமையில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த உபகுழு நியமிக்கப்பட்டது.

அதற்கமைய, இந்த உப குழு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு எடுக்கக்கூடிய மிகவும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் தேவையான கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கை வழங்கவுள்ளது.
நாட்டின் கலை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நபர்களை நினைவுகூர்ந்த குழுவின் தலைவர், இளைஞர் சமூகத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்தத் தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாகக் கருதி செயற்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செயற்படுத்தப்படும் இளைஞர் பாராளுமன்றத்தின் தற்போதைய நிலை குறித்து குழுவின் தலைவர் இதன்போது வினவினார். அதற்கமைய, இளைஞர் பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த ஆண்டு மீண்டும் தேர்தல் நடத்தி ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். இளைஞர் பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயன்முறை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

Related Articles