ஆசிரியர்களுக்காக முதலீடு செய்வதை ஒரு நாடு மேற்கொள்ளும் மிக முக்கியமான முதலீடாகக் கருதுவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அத்துடன், கல்வியானது தனிநபர்களைச் சுதந்திரமாகச் சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்றும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொண்டு, சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கும், பன்முகத்தன்மையைப் பாராட்டுவதற்கும், சமூகச் செயற்பாடுகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்பதற்கும் நாம் வழங்கும் கல்வி புதிய தலைமுறைக்கு உதவிகரமாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார் .
ஜூலை 09, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஜூலை 07, 08, 09 ஆகிய மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில், தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) வழங்கப்பட்ட பட்டப் படிப்புகளைப் பூர்த்தி செய்த கல்வித் துறைசார் வல்லுநர்களுக்குப் பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது புதிய பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி வைத்த பிரதமர், அவர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,
பட்டமளிப்பு விழா என்பது தனிநபர் சாதனைகளைக் கொண்டாடுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வல்ல. மாறாக, அது கல்வியின் நோக்கம் குறித்தும், கற்றலின் ஊடாக நம் மீது சுமத்தப்படும் பொறுப்புகள் குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதற்காக கிடைக்கப் பெறுகின்ற ஒரு வாய்ப்பாகும்.
தேசிய கல்வி நிறுவகம் பல தசாப்தங்களாகக் கலைத்திட்ட மேம்பாடு, ஆசிரியர் கல்வி, கல்விசார் ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்சார் அபிவிருத்தி ஆகிய துறைகளில் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனமாக, இலங்கைக் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் செயல்முறையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனமென குறிப்பிடலாம்.
கல்விசார் சாதனைகளை மாத்திரமன்றி, கருணை, ஆக்கத்திறன், விமர்சனப் பகுப்பாய்வுச் சிந்தனை மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் கற்பிக்கின்ற கல்வி முறையொன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.
மாறிவரும் உலகிற்குப் பொருத்தமான கல்வி முறையொன்று நமக்குத் தேவைப்படுகின்றது. அங்கு விமர்சனப் பகுப்பாய்வுச் சிந்தனை, டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவு, ஆக்கத்திறன், ஒற்றுமை மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் போன்ற விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்காது, அவற்றைக் குறைக்கும் வகையிலான கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவதாகும். இதற்கு அர்ப்பணிப்பு, புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மன உறுதி என்பன அவசியமாகின்றன.
எமது சமூகத்தின் தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். எந்தவொரு ஆசிரியருக்கும் ஒரு பிள்ளையின் தன்னம்பிக்கையையும் எதிர்கால எதிர்பார்ப்புகளையும் கட்டியெழுப்பும் ஆற்றல் உள்ளது. அதேபோல், வகுப்பறைச் சமத்துவம், அனைவரையும் சமமாக நடத்துதல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைப் பழகும் ஒரு இடமாக மாற்றுவதற்கான திறன் அவர்கள் கொண்டிருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான பண்பாகும்.
இதனாலேயே, ஆசிரியர்களுக்காக முதலீடு செய்வதை ஒரு நாடு மேற்கொள்ளும் மிக முக்கியமான முதலீடாக நாம் கருதுகிறோம். தொடர்ந்து கற்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், தங்களது பணிகளை மறுபரிசீலனை செய்வதற்கும் மற்றும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கும் ஆசிரியர்களே எதிர்காலத்திலும் நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் இந்தச் சான்றிதழ்கள் உங்களது தனிப்பட்ட முன்னேற்றத்தை மாத்திரமன்றி, நீங்கள் சமூகத்திற்கு ஆற்றும் சேவையையும் பிரதிபலிக்கின்றன. கல்வியின் உண்மையான பெறுமதியென நாம் பெற்றுக்கொள்கின்றவை மாத்திரம் அளவிடப்படுவதில்லை, மாறாக நாம் பிறருக்குப் பெற்றுக்கொடுக்கும் பங்களிப்பு எத்தகையது என்பதிலேயே அது தங்கி இருக்கின்றது. ஆகையினால் எப்போதும் கேள்விகளை எழுப்பி, புதிய விஷயங்களைக் கற்பனை செய்து பாருங்கள்.
ஒவ்வொரு பிள்ளையும் தனது அதிகபட்ச திறனை எட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்ற ஓர் எதிர்காலத்திற்காகப் பணியாற்றுங்கள். கல்வியின் உண்மையான வாக்குறுதி அதுவேயாகும். அது உங்களதும், எங்களதும் நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்புமாகும், என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மருத்துவர் மதுர செனவிரத்ன,
அரசாங்கம் என்ற வகையில், மிகவும் நீதியான அதே நேரத்தில் 21ஆம் நூற்றாண்டின் யதார்த்தங்களுக்குப் பொருத்தமான கல்விக் கலைத்திட்ட மறுசீரமைப்புச் செயல்முறையொன்றை நாட்டில் நிறுவுவதற்கு நாம் ஆரம்பித்திருக்கின்றோம். எனவே, புதுமைகளைப் புகுத்த விரும்புகின்ற, பழைய நடைமுறைகளுக்குச் சவால் விடுக்கின்ற, புதிய அறிவை உருவாக்க விரும்புகின்ற பரந்த சிந்தனையாளர்கள் நமது சமூகத்திற்கு தேவைப்படுகின்றனர், எனக் கூறியதோடு
பின்னணி, சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கருத்திற்கொள்ளாது ஒவ்வொரு பிள்ளையும் தரமான கல்வியைப் பெறத் தகுதியானவர்கள் என நம்புகின்ற, கற்றல் மற்றும் கற்பித்தல் கலையைச் சரியாகப் புரிந்துகொண்ட நிபுணத்துவ வல்லுநர்களே நமக்குத் தேவைப்படுகிறார்கள் என்றும், இன்று இங்கு கூடியிருக்கும் பட்டதாரிகள் தாங்கள் பெற்ற நிபுணத்துவ அறிவைப் பிறருக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மூலவளமாகப் பயன்படுத்துவார்கள் எனத் தான் நம்புவதாகவும், தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல். வசந்த குமார, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விச் சபை, கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


