நீர்கொழும்பு சிறைச்சாலையின் நிலைமை தொடர்பாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மஹமோதர மற்றும் பழைய போகம்பர சிறைச்சாலைகள் தொடர்பாக விடுத்துள்ள விசேட அறிக்கை
2026 ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக, அந்த வளாகம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அது ஒரு குற்றத்தலமாகவும் கருதப்படுகிறது.
எனவே, அந்த வளாகத்தில் கைதிகளை வைத்திருப்பது பொருத்தமற்றது என சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, விசாரணை அதிகாரிகள் குற்றத்தலத்தில் பாதுகாப்பாக விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்கவும், கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விசாரணைகள் முடிந்ததும் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவாக ஆரம்பிக்கவும் ஏதுவாக, அங்கு தங்கியிருந்த பெரும்பாலான கைதிகள் தற்காலிகமாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், தற்போது இயங்கி வரும் சிறைச்சாலைகளின் நெரிசல் மற்றும் கைதிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, தற்காலிக அடிப்படையில் வேறு பொருத்தமான இடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கைதிகளை மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது
எனவே, நீர்கொழும்பு சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை, தற்காலிக அடிப்படையில் "மஹமோதர" (Mahamodara) மற்றும் "பழைய போகம்பறை" (Old Bogambara) வளாகங்கள் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளாக நிறுவுவதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


