2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோவாகவும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கும் நோக்கில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு, அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நேற்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இவ்வேலைத்திட்டம் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை தேயிலை சபை மற்றும் தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சிறு தேயிலை தோட்ட விவசாயிகளின் விளைச்சலை அதிகரித்தல், அவர்களின் வருமானத்தை மேம்படுத்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை தயாரிப்புகளை அறிமுகப்படுத்தல், தேயிலை கைத்தொழிலை சுற்றுலாத்துறையுடன் இணைத்தல், நவீன மற்றும் நிலையான விவசாய முறைகளை அறிமுகப்படுத்தல், தெரிவு செய்யப்பட்ட தேயிலை கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் தேயிலை உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை நிறுவுதல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 95% ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மொத்த உற்பத்தியில் 75% பங்களிப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டில் 144 தேயிலை கிராமங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலேயே இக்கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, “Ceylon Tea Village” வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2026 ஜூலை 15 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, ஹல்கொல்ல ஹபுகஸ்தலாவ பகுதியில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 11 மாவட்டங்களை உள்ளடக்கிய 144 தேயிலை கிராமங்களில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன


