தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) பிற்பகல் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
சீன அபிவிருத்தி வங்கி (CDB) வழங்கிய சலுகைக் கடனின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2022 மே மாதம் முதல் 2024 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தேசிய முக்கியத்துவம் கருதி, இலங்கை அரசாங்கத்தின் நிதியையும் பயன்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தின் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன.
இப்பகுதியில் வேகமாக பரவி வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு ஒரு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டம், இப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்யும்.
இதன் மூலம் 25,000 வீடுகளுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
32 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டம், நாளொன்றுக்கு 18,000 கன மீட்டர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், தலா 1,500 கன மீட்டர் திறன் கொண்ட 03 நீர் தாங்கிகள், 12.75 கிலோமீட்டர் நீளமுள்ள நீரைக் கொண்டு செல்லும் குழாய்க் கட்டமைப்பு மற்றும் 158 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் விநியோகக் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இங்கு உரையாற்றிய வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட இந்த தம்புத்தேகம நீர் திட்டத்தின் மூலம் 25,000 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதற்காக 32 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, நிர்மாணப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். நாம் கடந்த இரண்டு ஆண்டுகளின் வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கீடு செய்து, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.
இத்திட்டத்தை ஆரம்பிக்கும் போது, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெறுவது தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று இத்திட்டம் இராஜாங்கனை விவசாயத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடனேயே திறந்து வைக்கப்படுகிறது. இன்று அவர்களும் இங்கு கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை எங்களிடம் சமர்ப்பித்தனர். அவற்றை நிறைவேற்ற நாம் தயாராக உள்ளோம். அதில் ஒன்று, இத்திட்டத்திற்காக நீரைப் பெறுவதால் இராஜாங்கனை விவசாயிகளுக்கு எந்தவொரு நீர் பற்றாக்குறையும் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்பதாகும். ஒரு சொட்டு நீர் பற்றாக்குறை கூட ஏற்படாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன், அது குறித்து எந்தவொரு சந்தேகமும் வைத்துக்கொள்ள வேண்டாம். விவசாய மக்களுக்கு நீர் வழங்காமல், விவசாயத்திற்கு நீர் கொடுக்காமல், குடிநீருக்காக மாத்திரம் நீரைப் பெறுவது நடக்காது. நாம் இந்த நீரை வழங்குவதும் விவசாயக் குடும்பங்களுக்குத்தான்.
அதேபோல், ஏதேனும் ஒரு காரணத்தால் நீர் பிரச்சினை ஏற்பட்டு பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அது குறித்தும் எந்த சந்தேகமும் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு சேதத்தின் போதும் விவசாய மக்களுக்கு தாராளமாக இழப்பீடு வழங்கிய அரசாங்கம் இதுவாகும். நில்வலா உப்பு நீர் தடுப்பின் காரணமாக விவசாயிகளுக்கு கடந்த ஏழு போகங்களாக ஏற்பட்ட நட்டத்திற்காக நாம் 120 கோடி ரூபா இழப்பீடு வழங்கியுள்ளோம். யான் ஓயா திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பிரச்சினைகள் காணப்பட்டன. நாம் ஆட்சிக்கு வந்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்காக 18 கோடி ரூபாவை மாவட்ட செயலாளருக்கு அனுப்பியுள்ளோம். வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்காக இரண்டு இலட்சம் விவசாயிகளுக்கு 1200 கோடி ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாய மக்களுக்கு ஏதேனும் நட்டம் ஏற்பட்டால், விவசாய நிலங்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்காக தாராளமாக இழப்பீடு வழங்கத் தயாராக இருக்கும் அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது.
மேலும், இதற்காக நீரைப் பெறுவதாயின் 'கினிப்பெட்டி பாலத்தை' அமைத்துத் தருமாறு மற்றுமொரு கோரிக்கை விடுத்தனர். நாம் 24 கோடி ரூபா செலவில் அந்த இடத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய பாலம் ஒன்றை அமைக்கவுள்ளோம். இன்னும் சில நாட்களில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும். அதேபோல், கினிப்பெட்டி பாலத்தை புனரமைக்க முடியுமா அல்லது புதிய பாலம் ஒன்றை அமைக்க வேண்டுமா என்று கண்டறிவதற்காக நாம் நிபுணர் குழுவை நியமித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே பயப்பட வேண்டாம், விவசாய மக்களுக்கு எந்தவொரு பாதிப்போ அல்லது நட்டமோ ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், சீன தூதுவர் Qi Zhenhong, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள், உட்பட பிரதேச மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-10


