சமுத்திர அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஐயோரா மத்திய நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து, இலங்கை மார்ச் 11 ஆம் திகதி ஐயோரா தினத்தை நினைவுகூர்ந்தது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சும், மத்திய நிலையத்தின் வரவேற்பு நிறுவனமான இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது.
இதன் போது, சமுத்திர முகாமைத்துவம் தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை முன்னேற்றுதல் ஆகிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டதுடன், இந்து சமுத்திர வளைகுடா நாடுகள் அமைப்பு (IORA) கொள்கைகளுக்கு இலங்கை வழங்கி வரும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான ஐயோரா தினத்தின் கருப்பொருளான “IORA Improves Lives” என்ற தலைப்பு, இந்து சமுத்திரப் பிராந்திய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலன்களை மேம்படுத்துவதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும், சமுத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்தியை முன்னேற்றுவதில் இலங்கை வகிக்கும் பங்கையும் துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், சமுத்திர அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான இலங்கையின் ஐயோரா மத்திய நிலையம், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அறிவியல் அடிப்படையிலான சமுத்திர முகாமைத்துவத்தை முன்னேற்றுவதற்கான ஆய்வு, அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முக்கிய மையமாக செயல்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், ஐயோரா பொதுச் செயலாளர் சஞ்சீவ் ரஞ்சன் அவர்களின் வாழ்த்துச் செய்தி இணையவழி மூலம் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, சமுத்திர அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான இலங்கையின் ஐயோரா மத்திய நிலையம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், இது பிராந்திய அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்தை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் முக்கிய சமுத்திர மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இணையவழி கருத்தரங்கத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப விரிவுரையை மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரித பட்டியாரச்சி அவர்கள் வழங்கினார்.
ஐயோரா உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்கள், உரையாடல் கூட்டாளர் நாடுகளின் பிரதிநிதிகள், பார்வையாளர் நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நேரடியாகவும் இணையவழியாகவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


