அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என யாழ்  அரசாங்க அதிபர் அறிவிப்பு

அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என யாழ்  அரசாங்க அதிபர் அறிவிப்பு
  • :
அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நேற்று (26.11.2025) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார்.

 இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது எனவும், அடுத்த ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

 
மேலும், தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
மேலும், பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 0212117117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவ் இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் எனவும் அவர் பதிலளிக்காது தவறுதலாக தவறும்பட்சத்தில் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அத் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
 
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து வடிகால்கள் சீர் செய்ய வேண்டிய கோரிக்கைகள் அதிகம் கிடைக்கப்பெறுவதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் முப்படையினர் உதவி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அனைவரின் பூரண ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
 
இக் கூட்டத்தில் வைத்து அரசாங்க அதிபரினால் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகவே நிதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட அலுவலர் திருமதி. ஆ. நளாயினி, உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles